Random image

நினைவுச் சின்னங்களை புகைப்படம் எடுக்க இனி தடை இல்லை

டில்லி:

பிரதமர் மோடி உத்தரவை தொடர்ந்து இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட சில நினைவுச் சின்னங்களை தவிர இதர நினைவுச் சின்னங்களில் புகைப்படம் எடுப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்திய தொல்லியல் துறையின் கீழ் 3,686 நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்கள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டது. தொல்லி யல் துறையின் அனுமதியுடன், தொழில் முறை புகைப்பட கலைஞர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

டில்லியில், தொல்லியல் துறையின் புதிய தலைமை அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பேசுகையில்,‘‘ நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களில் புகைப்படம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து தொல்லியல் துறையின் கூடுதல் பொது இயக்குனர் ஊர்மிளா சந்த் சர்மா பிறப்பித்துள்ள உத்தரவில்,‘‘மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, அஜந்தா -எல்லோரா குகைகள், தாஜ்மஹாலின் முக்கிய கல்லறை மற்றும் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லே அரண்மனை ஓவியங்களை தவிர மற்ற அனைத்து நினைவிடங்களையும் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.