தொல்பொருள் ஆய்வு துறைக்கு ரூ.308 கோடியில் புதிய அலுவலகம்…..3,686 நினைவு சின்னங்களுக்கு செலவு குறைப்பு

டில்லி:

இந்திய தொல்பொருள் ஆய்வு துறை சார்பில் நாட்டில் உள்ள 3,686 நினைவுச் சின்னங்கள் பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த துறைக்கு டில்லியில் புதிதாக தலைமை அலுவலகம் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மிகவும் பளபளப்பான முறையில் இந்த கட்டடத்தை கட்டி முடிக்க ரூ.305.3 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த துறை சார்பில் பராமரிக்கப்படும் நினைவுச் சின்னங்கள் குப்பையாக தான் உள்ளது. இதற்கு காரணம் பராமரிப்புக்கு குறைவான தொகை செலவிடுவது தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தலைமை அலுவலகம் கட்ட செலவிடப்பட்ட தொகையை விட குறைவாகவே 3,600 நினைவுச் சின்னங்களின் பராமரிப்புக்கு செலவிடப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டில் இவற்றை பராமரி க்க ரூ.206.55 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘பழைய கட்டடம் இனி தேசிய அருங்காட்சியகமாக செயல்படும். புதிய அலுவலகத்தை இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி திறந்துவைக்கவுள்ளார். எனினும் கட்டடம் கட்ட செலவிடப்பட்ட தொகையையும், நினைவு சின்ன பராமரிப்புக்கு செலவிடப்பட்ட தொகையையும் ஒப்பிடுவது நியாயமற்றது. புதிய கட்டடம் என்பது ஒரு முறை ஏற்படும் செலவாகும். இனி அலுவலக பராமரிப்பு செலவு மிக குறைவாகவே ஏற்படும். ஆனால், நினைவுச் சின்னங்கள் அதே அளவு தொகையுடன் தொடர்ப்து பராமரிக்கப்பட்டு வரும்’’ என்றார்.

டில்லி செங்கோட்டை பராமரிப்பு டால்மியா பாரத் குழுமத்துக்கு வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல வகைகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. 2017-18ம் ஆண்டில் அதிக வருவாய் வரும் 10 முன்னணி நினைவுச் சின்னங்களுக்கு ரூ.151.3 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் தோட்டக் கலை பணிகளுக்கு செலவிடப்பட்டுது கணக்கில் வரவில்லை.

2014-15ம் ஆண்டில் ஆக்ரா வட்டாரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களான தாஜ்மகால், ஆக்ரா கோட்டை, பேத்பூர் சிக்ரி மற்றும் 5 நினைவு சின்னங்களின் பராமரிப்புக்கு ரூ. 14 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டில் ரூ. 8.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் தாஜ்மகால், ஆக்ரா கோட்டை, பேத்பூர் சிக்ரி ஆகியவை மட்டும் ரூ.88.42 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

சென்னை வட்டாரத்தில் 2014-15ம் ஆண்டில் ரூ.10.70 கோடியும், 2017-18ம் ஆண்டில் ரூ.4.6 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. ஐதராபாத் வட்டாரத்திலும் இதேபோல் ரூ.9.98 கோடியில் இருந்து ரூ.3.5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை பராமரிப்புக்கு டால்மியா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் படி அந்நிறுவனம் ஆண்டுக்கு 5 கோடி என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு ரூ. 25 கோடி செலவிட வேண்டும். இதேபோல் மேலும் பல நினைவுச் சின்னங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தொல்லியல் துறை நாட்டில் உள்ள பகுதிகளை 20 வட்டாரங்களாக புவியியல் அடிப்படையில் பிரித்துள்ளது. அதனால் தனித்தனியாக ஒவ்வொரு நினைவுச் சின்னத்துக்கும் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற தகவல் அத்துறையிடம் இல்லை. வட்டார வாரியாக தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.