அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பா?

வாஷிங்டன்: அமெரிக்க மக்கள்தொகையில் மொத்தம் 2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும், இதன்மூலம் அந்நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆபத்தான கட்டத்தில் வாழ்கின்றனர் என்றும் அமெரிக்க அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுவரை, அந்நாட்டில் 23 லட்சம் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த எண்ணிக்கையிலிருந்து 10 மடங்கு கூடுதலாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டும், தங்களுக்கான தொற்றை அறியாமல் இருக்கிறார்கள் மற்றும் நடுவில் பரிசோதனை நடைமுறையில் ஏற்பட்ட இடைவெளியால் தொற்று தொடர்பான உண்மை எண்ணிக்கை உறுதிசெய்யப்படாமல் உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படியான பரிசோதனை குறைபாடுகளை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் வேண்டுமென்றே நிகழ்த்துகிறது என்றும், அதன்மூலம், தேசியளவிலான பீதியை அது மட்டுப்படுத்த முயல்கிறது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

‍அமெரிக்காவில், 12 மாநிலங்கள் வரை, கொரோனா தொற்றால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டு கோடி பேர் பாதிப்பு என்ற கணக்கின்படி பார்த்தால், அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் (33 கோடி) சுமார் 6% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாகிறது.