சென்னை:

மிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களுள் சென்னை முதலிடத்தில் இருப்பதாகவும் தமிழக சட்ட மன்றத்தில் முதல்வர் எடப்பாடி கூறினார்.

ஆனால், தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் வழிப்பறி, திருட்டு மற்றும் கூட்டுக் கொள்ளை போன்ற சொத்து சம்மந்தப்பட்ட குற்றங்கள் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மாறுபட்ட புள்ளி விவரங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.


தமிழக சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. உறுப்பினர் களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,

காவல் துறையினர் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், சிறப்பாகவும், மனித நேயத்தோடும், எவ்வித குறுக்கீடுமின்றி அவர்களது பணிகளை செய்ய, அ.தி.மு.க. அரசு அனைத்து நடவடிக்கைக ளையும் எடுத்து வருவதுடன், அவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுக்கின்றது.

கடந்த 8 வருடங்களாக காவல் துறையினர் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை, குற்றத் தடுப்பு, குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை பெற்றுத் தருதல், தடுப்புச் சட்டங்களின் கீழ் காவலில் வைத்தல் போன்ற நடவடிக்கைகளினால் மாநிலத்தில் பெரும்பாலான குற்றங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை நான் கூறவில்லை, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன என்று தெரிவித்து அந்த புள்ளி விவரப் பட்டியலை வாசித்தார்.

தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, நமது மாநிலத்தில் வன்குற்றங்கள் 10,844 ஆகும். ஆனால், கேரளாவில் 13,548 வழக்குகளும், கர்நாடகாவில் 19,648-ம், குஜராத்தில் 11,829-ம், ஒடிசாவில் 19,092-ம், அரியானாவில் 14,392-ம், ராஜஸ்தானில் 16,223 வழக்குகளும் தாக்கலாகியுள்ளன.

அதே அறிக்கையின் படி, நமது மாநிலத்தில் தாக்கலான சொத்து சம்பந்தமான குற்றங்கள் கடந்த 2016-ம் ஆண்டு 23,650 மட்டுமே. இது மாநிலத்தில் குற்றங்கள் தாக்கல் ஆவதும், குற்ற விகிதமும் மற்ற மாநிலங்களைவிட மிக குறைவாக இருந்து வருகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.

கடந்த 8 ஆண்டுகளாக கொலை உள்ளிட்ட சொத்து சம்பந்தமாக தாக்கலான ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 297 வழக்குகளில், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 499 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது 71 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவ்வழக்குகளில் களவுபோன 66.5 சதவீத சொத்துகள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளன.

களவு போன சொத்துகளை மீட்பதில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்பதை இந்த அவைக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

பெண்களின் நலனை காப்பதிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருவதால், நமது மாநிலத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் குறைந்து வருகின்றன.

சிறுமி மற்றும் பெண்கள் கடத்தல் வழக்குகள் 2010-ம் ஆண்டு 1,464 ஆக இருந்தது, 2018-ம் ஆண்டு 907 ஆக, 38 சதவீதம் குறைந்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, இந்தியாவில், பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த மெட்ரோ நகரங்களில் சென்னை முதல் நகரமாகவும், பெருநகரங்களில் (20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்கள்), கோயம்புத்தூர் முதல் நகரமாகவும் உள்ளது.

காவல் துறையினரின் விரைவான நடவடிக்கை மற்றும் சி.சி.டி.வி. கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டதால், பெருமளவில் சங்கிலி பறிப்பு குறைந்துள்ளது.

காவல் துறையில் 9 ஆயிரத்து 694 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. அக்காலிப் பணியிடங்க ளில் தற்போது, 969 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 8,427 இரண்டாம் நிலை காவலர் பணியிடங் களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காவல்துறை அறிவிப்புகளில், 99.1 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு எடப்பாடி பேசினார்.

ஆனால், காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, வெளியிடப்பட்ட  காவல்துறை கொள்கை விளக்க குறிப்பின்  புள்ளி விவரங்களில்

தமிழ்நாட்டில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபட்டு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள் 2017ஆம் ஆண்டைவிட, 2018ஆம் ஆண்டு 25 சதவீதம் அதிகரித்து இருப்பது, சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட 2019-2020ஆம் ஆண்டுக்கான காவல்துறை கொள்கை விளக்க குறிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

அதில், 2017ஆம் ஆண்டு மட்டும் பாலியல் பலாத்காரத்துக்காக போக்சோ சட்டத்தின் கீழ் 1,154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோக்சோ சட்டத்தின் கீழ், பாலியல் சீண்டல் போன்ற மற்றவகையான குற்றங்களுக்கு 433 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, 2017ஆம் ஆண்டில் 1,587 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2018ஆம் ஆண்டில், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டை விட, 25 விழுக்காடு அதிகரித்து 2,045 வழக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்குகள் மட்டும் 1,464 ஆகும். பாலியல் சீண்டல் உள்ளிட்ட மற்ற வகையான பாலியல் குற்றங்களுக்காக, போக்சோ சட்டத்தின் கீழ், 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 முதல் 2018 வரை தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில், 2016ஆம் ஆண்டில் 92, 2017ல் 94 ஆதாய கொலைகளும், கடந்தாண்டு 81 ஆதாய கொலைகளும் பதிவாகியுள்ளன.

கடந்தாண்டு 100 கூட்டுக் கொள்ளைகளும், களவு எனும் வீடு புகுந்து திருடுதல் தொடர்பாக 4 ஆயிரத்து 516 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் கடந்த ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது.

இதே போல கொடுங்குற்றங்களான கொலை 2017-ம் ஆண்டு பதிவான ஆயிரத்து 466 லிருந்து கடந்தாண்டு ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது.

கொலை முயற்சி, அடிதடி போன்ற குற்றங்களும் அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளை விட அதிகரித்து 2018-ல் 2 ஆயிரத்து 240 கலவரங்கள் பதிவாகியுள்ளது.

ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  தற்போதைய புள்ளி விவரங்களை தெரிவிக்கமல், தேசிய குற்ற ஆவணத்தின் பழைய  புள்ளி விவரங்களை கூறி, தமிழக்ததில் குற்றங்கள் குறைந்து இருப்பதாக தெரிவித்து, மக்களை ஏமாற்றி வருவதை, அவர் கவனித்து வரும் காவல்துறை கொள்ளை விளக்கக் குறிப்பின் புள்ளி விவரங்களே அம்பலப்படுத்தி உள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.