சூலூர்:

சூலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வரும் துணைமுதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலினும், டிடிவி.தினகரனும் ஜோசியக்காரர்களாக மாறி விட்டனர் என்று காட்டமாக விமர்சித்தார்.

அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி  அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து, சூலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பருவ மழை பொய்த்ததால், ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கும் திட்டத்தை அதிமுக அறிவித்தது. ஆனால், இந்த திட்டத்தை திமுக தடுத்தது என்று குற்றம் சாட்டியவர்,  அதிமுக அரசு  செயல்படுத்தி வரும் திட்டங்களால் பொறாமை அடைந்துள்ள  திமுக, அவற்றைத் தடுக்க முற்படுவதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் இதுவரை 6 லட்சம் கான்கிரீட் வீடுகள், ஏழை மக்களுக்கு கட்டித் தரப்பட்டு இருப்பதாக வும்,  2023-ம் ஆண்டுக்குள் குடிசைகளில் வசிக்கும் அனைவருக்கும், தரமான கான்கிரிட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று கூறினார்.

இந்த தேர்தல் முடிந்தால் அதிமுக இருக்காது என்கிறார் அழகிரி. ஆனால், இவ்வளவு நாள் அவர் எங்கே இருந்தார் என்றே யாருக்கும் தெரியாது. காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் காணாமல்போய் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. பூதக் கண்ணாடியை வைத்துதான் காங்கிரஸ் கட்சியைத் தேடும் நிலை உள்ளது என்று காங்கிரசை சாடியவர்,  எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி நடை பெற்று வருவதாகவும், எதிர்க் கட்சிகள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை வாக்காளர்கள் புறக்கணித்து, அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும்,  சூலூர் தொகுதியில் அதிமுகவை எதிர்த்துப் போட்டியிடுபவர்களுக்கு டெபாசிட்கூட கிடைக்காது என தெரிந்து, வெளியூர் ஆட்களை இங்கு வந்து போட்டியிடச் செய்துள்ளதாக குற்றம் சாட்டியவர்,  சுனாமி வந்தாலும் அதிமுக அசையாது என்றும், ஸ்டாலினும், டிடிவி.தினகரனும் ஜோசியக்காரர்களாக மாறி, 23-ம் தேதிக்குப் பின்னர் இந்த ஆட்சி இருக்காது  புலம்பி வருவாகவும் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்தபோது, அவரைக் காப்பாற்றாதவர்கள் தினகரன் குடும்பத்தினர். தற்போது, அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள்,  தனி ஜாதிக் கட்சி ஆரம்பித்துள்ளவர்கள் தமிழக்தில்  உருப்பட்டதாக சரித்திரம் இல்லை என்ற கூறியவர், இவர்கள் யாராலும் அதிமுகவை எதுவுமே செய்ய முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.