சத்துணவு ஊழியர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: பள்ளிக்குழந்தைகள் பாதிப்பு?

சென்னை:

மிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்த சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதன் காரணமாக பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு  சத்துணவு வழங்கப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

வரையறுக்கப்பட்ட ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் , ஓய்வு பெறும்போது அமைப்பாள ருக்கு ரூ. 5 லட்சம், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும். 20,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடைய நியாயமான கோரிக்கைளை அரசு நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கடந்த 25-ம் தேதி முதல்  தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.

அவர்களின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளாததால், இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு கூடங்கள் மூடப்படும் என்றும், யாரும் சமையல் செய்ய மாட்டார்கள் என்று   தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர்.நூர்ஜஹான் கூறி உள்ளார்.

இதன் காரணமாக, தமிழகம் முழுவதும்  செயல்பட்டு வரும் சுமார் 47,000 சத்துணவு மையங்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார்  56 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது.