மும்பை: இந்திய அணியில் விராத் கோலி மற்றும் ரோகித் ஷர்மா இடையே இருக்கும் மோதல் போக்கால், அணியானது இரண்டு பிரிவுகளாக இயங்கியது தெரியவந்துள்ளது.

இந்திய அணி உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதியில், விமர்சனத்துக்குரிய முறையில் விளையாடி தோல்வியடைந்தது. அம்பதி ராயுடுவை அணியில் எடுக்காதது, தோனியை 7வது வீரராக களமிறக்கியது உள்ளிட்ட ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.

கோலி தன்னிச்சையாக செயல்படுவதும், பெங்களூர் அணியின் வீரர்களான சாஹல் மற்றும் ராகுலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஐபில் அணிகளின் அடிப்படையில், இந்திய தேசிய அணிக்குள் கோலிக்கும், ரோகித்துக்கும் பிரிவினை எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோலிக்கு பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயின் ஆதரவும் உள்ளதாகவும், அதனால் அவர் கோலியை எந்தக் கேள்வியும் கேட்பதில்லை எனவும் நம்பப்படுகிறது. மேலும், கோலிக்கு ரவி சாஸ்திரியுடனும்கூட மோதல் இருந்ததாய் கூறப்படுகிறது.

இத்தகையப் பல்வேறு காரணங்களால்தான், 240 என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி, அரையிறுதியோடு நடையைக் கட்ட வேண்டியதானது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.