இதயங்கள் இணைந்துவிட்டதா? அறிவாலயம் எதிரே, ஸ்டாலின் அழகிரியுடன் போஸ்டர்……

சென்னை: திமுகவில் ஏற்பட்ட வாரிசு அரசியல் மோதல்  காரணமாக, மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள இந்த காலக்கட்டத்தில், ஸ்டாலின், அழகிரி இணைந்து காணப்படும் போஸ்டர்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. குறிப்பாக திமுக தலைமையகம் அமைந்துள்ள தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் எதிரே உள்ள சுவர்களில், ஸ்டாலின் அழகிரியுடன் போஸ்டர்கள் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன.
அந்த போஸ்டரில், 2021ல் தமிழகத்தை ஆளப்போகும் சிங்கங்களே என வாசகங்கள் பொறிக்கப்பட்டு உள்ளதுடன், கழகத்தை ஆள வைப்போம், தமிழகத்தை வாழ வைப்போம் என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டரை காணும், திமுக தொண்டர்களும், பொதுமக்களும், இதயங்கள் மீண்டும் இணைந்துவிட்டதாக கருதி சந்தோஷம் அடைந்துள்ளனர்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட அண்ணன் தம்பி  மோதல் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து மு.க.அழகிரி  நீக்கப்பட்டார். தொடர்ந்து அவர் மீண்டும் கட்சியில் சேர முயன்றும், அவரது தம்பி மு.க.ஸ்டாலினால் தடுக்கப்பட்ட தாக கூறப்பட்டது.   பின்னர், கருணாநிதி காலமானதை தொடர்ந்து மீண்டும் தன்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அழகிரி குரல் கொடுத்தார். ஆனால், அதை ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை.

அதன் பின்னர்,  அவ்வப்போது  கருணாநிதியிடம் உண்மையாக விசுவாசம் கொண்ட தொண்டர்கள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள் என திமுக தலைமைக்கு மிரட்டல் விடுத்து வந்தார்.  பின்னர் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலின்போதும் திமுகவுக்கு எதிராக பேசினார். அப்போது, நான் இல்லாமல் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் திமு வெல்லவே முடியாது என்றவர், அங்கு போட்டியிட்டால் ‘மூன்றாவது இடத்துக்கு தான் வருவார்கள்.  எனது பொறுமைக்கும் எல்லை உள்ளது எவ்வளவு பேர் என்னை நம்பி பேரணிக்கு வந்தார்கள். அவர்களுக்காகவாவது நல்ல முடிவை எடுப்பேன். பொறுமைக்கும் ஓர் எல்லை உள்ளது. காத்திருந்து பார்ப்போம் என்று சூளுரைத்தார்.

பின்னர் சுமார் ஓராண்டு காலம் அமைதியாக இருந்த அழகிரி, தமிழக சட்டமன்ற தேர்தலி எதிரொலியாக, கடந்த ஆண்டு (2020) டிசம்பர் இறுதியில்  கோபாலபுரம் சென்று, தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்தபோது, தன்னை பாஜகவுக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் , ஆனால், அதை நிராகரித்து விட்டதாகவும் கூறியவர்,  திமுகவில்,  தனது மகனுக்கு உரிய பதவி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பின்னர், தனிக்கட்சி தொடங்கப்போவதாக பரபரப்பு அறிக்கை விடுத்த அழகிரி, அது தொடர்பாக  தனது ஆதரவாளர்களுடன் ஜனவரி 3ம் தேதி ஆலோசனை நடத்தினார்.  அதன் முடிவு என்ன என்பதை தெரிவிக்காமல் மவுனம் காத்தார்.

இதைத்தொடர்ந்து, மு.க.அழகிரியை திமுகவில் இணைத்துக்கொள்ளும்படி, கருணாநிதி குடும்பத்தினர் மீண்டும் ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியானது.  அழகிரியை சமாதானம் செய்யும் பணியில் மூத்த மு.க.தமிழரசு மற்றும் சகோதரி  செல்வி  ஆகியோர் இறங்கியதாகவும்,  இருவரையும் ஒன்றிணைக்கும் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கோபாலபுரம் வட்டார தகவல்கள் உறுதி செய்தன.

இந்த பேச்சுவார்த்தைகளின்போது,  அழகிரி, தனக்கு பதவி தேவையில்லை, ஆனால்,  தனது மகனுக்கு திமுகவில் நல்ல பதவி கொடுக்க வேண்டும் என்பதுடன்,  திமுக அறக்கட்டளையில் தனக்கு இடம்  வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அழகிரியின் மகன் தயாநிதிக்கு, பதவி கொடுக்க ஸ்டாலின் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், ஆனால், திமுக அறக்கட்டளையில் அழகிரிக்கு பதவி வழங்க முடியாது என்று என ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பின்னணியில்  மருமகன் சபரிசன் உள்ளதாக கூறப்படுகிறது.

இருந்தாலும், அண்ணன் தம்பி (மு.க.அழகிரி – மு.க.ஸ்டாலின்) இருவரும் நேரில் சந்தித்து பேசினால், பிணக்குகள் தீர்ந்து விடும் என செல்வி இருவரையும்  சந்திக்க ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் சந்திப்பு நடைபெற்றதாக அல்லது இனிமேல்தான் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த நிலையில்தான், ஸ்டாலின் அழகிரி இணைந்திருக்கும் போஸ்டர்கள் அறிவாலயம் பகுதிகளில் முளைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதயங்கள் இணைந்துவிட்டதா? என திமுகவினரே குழம்பிப்போய் உள்ளனர்.