டில்லி

ரும் மார்ச் 1 முதல் நாடெங்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் குறிப்பிட்ட நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இதற்காக சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய மருந்துகளுக்கு அவசரக் கால பயன்பாட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி என்னும் மருந்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது,

இதுவரை சுகாதாரப்பணியாளர்கள், கொரோனா முன் கள பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. வரும் மார்ச் 1 முதல்  கொரோனா தடுப்பூசிகள் இரண்டாம் கட்டமாகப் போடப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.  இதில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் குறிப்பிட்ட சில நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும்  போடப்பட உள்ளது.

இதில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு எந்தெந்த நோய்கள் இருக்க வேண்டும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.  அதன் பிறகு திங்கள் கிழமை முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.  இரண்டாம் கட்டத்தில் சுமார் 27 கோடி 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட 10 கோடி பேருக்கும் தடுப்பூசிகள் போட உள்ளனர்

45 வயதுக்கு மேற்பட்டோரில் இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் ஈரல் நோய் உள்ளவர்களும், நீரிழிவு, புற்று நோய், கடுமையான ஆஸ்த்மா, மனநிலை பிறழ்ந்தோர், கல்வி கற்க முடியாதோர் ஆகியோருக்கு தடுப்பூசிகள் போடப் பதிவு செய்து கொள்ளலாம்.  இதைத் தவிர நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு உள்ளவர்களும் பதியலாம். இதற்காக உள்ள ஒற்றைப் பக்க விண்ணப்பத் தாளில் உள்ள கேள்விகளுக்கு ஆம்/இல்லை என்பதைப் பதிந்து மருத்துவர் சான்று கையொப்பத்தைப் பெற வேண்டும்.

அதன் பிறகு அந்த விண்ணப்பத்தை கொரோனா தடுப்பூசி முகாம்களில் அளித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.  இந்த தடுப்பூசி முகாம்கள் தனியார் மருத்துவமனைகளிலும் நடக்க உள்ளன.  அங்கு ரூ. 300 கட்டணம் செலுத்த வேண்டும்.  இந்த முகாம்களின் விவரங்கள் குறித்த மொபைல் செயலி தற்போது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. விரைவில் இது பொது மக்களுக்கும் அளிக்கப்பட உள்ளது.

அதன் பிறகு பயனாளிகள் இந்த செயலி மூலம் தங்கள் பெயர்களை ஆதார அட்டை விவரம், மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் மருத்துவ சான்றிதழ் ஆகியவற்றுடன் பதியலாம்.   முகாம்களில் வரவேண்டிய நேரத்தைப் பெற்றோ அல்லது தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள முகாம்களுக்கு நேரடியாகச் சென்றோ மருந்து இருப்பை பொறுத்து ஊசிகள் போட்டுக் கொள்ளலாம்.