கூட்டுக் குடும்பமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தரையில் அமர்ந்து, மாறி மாறி பரிமாறி கொண்டு சிரித்து பேசி என்ன சாப்பிடுகிறோம் என்பதை தெரிந்து சாப்பிடுவோம். எனக்கு அந்த காய் கொடுங்க. இந்த கொழம்ப ஊத்துங்கன்னு வாய் விட்டு கேட்டு வாங்கி ஊற்றி பிசைந்து சாப்பிடுவோம். இந்த முறையில் நாம என்ன சாப்டுறோம். அது என்ன காய். அது என்ன ருசி. இதெல்லாம் உணர்ந்து சாப்பிட்டோம். அந்த உணவு நம் உணர்வினில், உடலில் கலந்ததால் நல்ல திடகாத்திரத்துடன் இருக்க உதவியது.

ஆனால் நவீன டெக்னாலஜிங்கிற பேர்ல இப்போதெல்லாம் சாப்பிடும் போது ஒன்னு டிவி ஓடிட்டு இருக்கணும். இல்லன்னா கைல மொபைல் போன் இருக்கணும். இது இல்லாம சாப்பாடு இறங்காதுனு ஆகிடுச்சு நமக்கு. இதோட விளைவுகள் பத்தி எதுமே உணர்ந்து கொள்ளும் பிடிவாதமாக இந்த மொபைல் கலாச்சாரத்துக்குள்ள சிக்கி சீரழிஞ்சு கெடக்கோம்.

சமீபத்தில் Journal of Nutrition என்கிற ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட ஓர் இதழில் கார்லி லிகோரி என்பவரின் தலைமையில் நடைபெற்ற 119 பேரின் மேல் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் முன்னால் ஒரு கம்ப்யூட்டரை வைத்து அதன் திரையில் சில நம்பர்களை ஒட விட்டு அவற்றில் ஒற்றைப்படை எண்களை காணும் போது மட்டும் கீ போர்டில் உள்ள ஸ்பேஸ் பாரை அழுத்த சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். இதனை இவர்கள் உணவு உட்கொள்ளும் அதே நேரத்தில் செய்ய சொல்லியுள்ளனர்.

அதே ஆய்வாளர்களை சாதாரணமாக எந்த கவனச்சிதறல்களும் இல்லாத சூழலில் உணவு உண்ண வைத்துள்ளனர். இவை இரண்டினையும் வைத்து செய்த இந்த ஆய்வின் முடிவில் இவர்கள் கண்டறிந்த உண்மை அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.

கம்ப்யூட்டரில் விளையாடியபடி உண்ட உணவை விட சாதாரண சூழலில் அதிக அளவிலான உணவை உண்டுள்ளனர் இவர்கள். மேலும் கம்ப்யூட்டரில் விளையாடியபடி சாப்பிட்டவர்கள் என்ன சாப்பிட்டோம், எவ்வளவு அளவு, அதன் ருசி என்ன, எப்படி பறிமாறப்பட்டது என்பது போன்ற விசயங்கள் எதையுமே உணர்ந்திருக்கவில்லை.

தற்போது குழந்தைகளின் கைகளில் மொபைல் இருந்தால் தான் உணவே சாப்பிட வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் இந்த மொபைல் குழந்தைகளுக்கு எவ்வளவு மோசமான உண்ணும் கலாச்சாரத்தை கற்று தருகின்றது என்று யோசித்து பார்த்தால் அதிர்ச்சி தான் மிஞ்சுகிறது.

உணவு என்பதனை உணர்வுப்பூர்வமான விசயமாக பார்த்து உணவை இறைவனுக்கு ஒப்பாக மதித்து போற்றிய இந்த நாட்டில் இன்று உணவு எவ்வளவு அலட்சியான விசயமாக போய்விட்டது என்பதையே காட்டுகிறது இது.

முடிந்த வரை சாப்பாடு கூடத்தை விட்டாவது தள்ளி வைக்க முயலுவோம் இந்த மொபைல் அரக்கனை….

-லட்சுமி பிரியா