முசாபர்நகர்

த்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு இஸ்லாமிய முதியவர் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கு எதிராக நாடெங்கும் கடும் போராட்டம் நடந்து வருகிறது.   அந்த போராட்டங்களில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.   கடந்த வெள்ளிக்கிழமை அன்று உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் போராட்ட ஊர்வலம் ஒன்று நடந்துள்ளது.  இந்த ஊர்வலத்தில் அந்த நகரத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.

அதே ஊரில் வசித்து வந்த 73 வயது இஸ்லாமிய முதியவரான ஹாஜி ஹமித் ஹாசன் என்பவரும் இந்த ஊர்வலத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.   குறிப்பாக வன்முறை நிகழாமல் தடுக்க இந்த ஊர்வலத்தை அவர் முன்னின்று நடத்தி உள்ளார்.  அவருடன் அவர் மகனான ஷாகித் உள்ளிட்ட பலர் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.

ஊர்வலம் அமைதியாக முடிந்த போதும்  இரு நாட்கள் கழித்து காவல்துறையினர் ஹாசன் வீட்டை முற்றுகை இட்டுள்ளனர்.  இது குறித்து ஹாசன், “நான் வயதில் முதியவன் என்பதால் ஊர்வலத்தில் வன்முறை நிகழாமல் தடுக்க முன்னின்று நடத்தினேன்.   என் மகனும் என்னுடன் கலந்துக் கொண்டார்.  இதைத் தவிர நாங்கள் வேறெதுவும் செய்யவில்லை.  ஆனால் காவல்துறையினர் திடீரென எனது வீட்டை முற்றுகை இட்டனர்.

பூட்டியிருந்த எனது வீட்டுக்கதவை உடைத்துக் கொண்டு வந்தவர்களில் பலர் சீருடையின்றி இருந்தனர்.  சுமார் 30 பேர் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த வாஷ்பேசின், குளியலறை பொருட்கள், ஃபிரிட்ஜ்,  வாஷிங் மெசின் உள்ளிட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கினர்.   எனது பீரோவில் எனது பேத்திகள் திருமணத்துக்கு வைத்திருந்த நகை மற்றும் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டனர்.

அதைத் தடுக்க முயன்ற என்னைத் துப்பாக்கி கட்டையால் கடுமையாகத் தாக்கினார்கள்.   எனது மகனும் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.  என்னைத் தாக்கும் போது நீ ஒரு இஸ்லாமியன்.  நீ ஒன்று பாகிஸ்தான் செல்ல வேண்டும். இல்லையானால் கல்லறைக்குச் செல்ல வேண்டும் என மிரட்டினார்கள்.  அதன் பிறகு என்னையும் என் மனைவியையும் எனது பேத்திகளுடன் சேர்ந்து ஒரு அறையில் தள்ளிப் பூட்டி விட்டுச் சென்றனர்.

எனது பேத்திக்கு வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடக்க உள்ளது.  அந்த பத்திரிகையைக் காட்டி கெஞ்சியும் அவர்கள் நகைகளைத் தரவில்லை.  பிரதமர் மோடி அடிக்கடி பெண் குழந்தைகளைக் காப்போம், எனக் கூறுகிறார்.   அவருடைய கட்சி ஆட்சியில் பெண் குழந்தைகளில் நிலை இவ்வாறு உள்ளது.

எனது மகனிடம் ஒரு துப்பாக்கியை அவர்களே கொடுத்து புகைப்படம் எடுத்து அவன் ஆயுதம் வைத்திருந்ததாகக் கூறி கைது செய்துள்ளனர்.  இன்று வரை எனது மகன் திரும்பி வரவில்லை.” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.