நந்தினி

அரியலூர்:

அரியலூர் அருகே தலித் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த இந்துமுன்னணி நிர்வாகிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் வலுத்துள்ளது.

அரியலூரை அடுத்த செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி. (வயது 16). தந்தையை இழந்த இவர், சித்தாள் வேலைக்கு சென்று வந்திருக்கிறார். அப்போது கொத்தனார் வேலை செய்து வந்த மணிகண்டன் என்பவர், நந்தினியை காதலிப்பதாகச் சொல்லி தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இதற்கு உடன்படாத நந்தினி ஒரு கட்டத்தில் தானும் காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இருவரும் நெருங்கிப் பழகினர். இதில் நந்தினி கர்ப்பமாகிவிட்டார். இதனால் தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி, மணிகண்டனை நந்தினி வற்புறுத்தி இருக்கிறார்.

பிணமாக நந்தினி

மணிகண்டனுக்கு நந்தினியை திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. ஆதிக்க சமுதாயத்தைச் சேர்ந்த தான்,  தலித் சமூகததைச் சேர்ந்த நந்தினியை எப்படி திருமணம் செய்துகொள்வது” என்று தனது நண்பர்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இவர் இந்து முன்னணி அமைப்பில் பொறுப்பாளராகவும் இருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 2015  டிசம்பர் 29-ந் தேதியன்று மணிகன்டன், தனது இந்து முன்ணணி நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நந்தினியை கடத்திச் சென்றுள்ளார். கீழமாளிகை என்ற இடத்தில் நந்தினியை அடைத்து வைத்து நண்பர்களுடன் சேர்த்து கூட்டாக நான்கு நாட்களாக தொடர் பலாத்காரம் செய்துள்ளார் மணிகண்டன்.
பிறகு நந்தினியை படுகொலை செய்து அவரது பெண்ணுறுப்பை பிளேடால் அறுத்து கர்ப்பப்பையில் இருந்த சிசுவை எடுத்து வீசியிருக்கிறார்கள்.

இதற்கிடையே, டிசம்பர் 30-ந் தேதியன்றே மகளை காணவில்லை என நந்தினியின் தாய் ராசக்கிளி, காவல்துறையில் புகார் கொடுத்தார். அப்போதே அவர், இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் மீதும்  இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜசேகர் மீதும் சந்தேகம் தெரிவித்தார்.

ராசக்கிளி

ஆனால் காவல்துறையினரோ, மணிகண்டன் கூட்டாளிகளை விசாரிக்கவே இல்லை.

கடந்த ஜனவரி 14-ந் தேதியன்று கீழமாளிகை அருகே கிணறு ஒன்றில் இருந்து நந்தினியின் நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டது. அப்போதும் மணிகண்டனை, காவல்துறை கைது செய்யவில்லை.

பொதுமக்களும், சில அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்திய பிறகே மணிகண்டனையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்யப்பட்டார்.

“நந்தினியை இப்படி படுகொலை செய்ய ஐடியா கொடுத்து மூளையாக செயல்பட்ட இந்து முன்னணி மாவட்ட செயலர் ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நந்தினி குடும்பத்தார் சார்பிலும், இந்த விவகாரம் குறித்து அறிந்தவர்கள் தரப்பிலும் தொடரந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

முந்தைய போராட்டம்

ஆனால், அரியலூர் மாவட்ட காவல்துறை இப்போதும் அலட்சியமாக இருப்பதாக புகார்கள் கிளம்பியிருக்கின்றன.

தற்போதைய போராட்டம்

இந்த நிலையில், இந்துமுன்னணி மாவட்டச் செயலாளர் ராஜசேகரை கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன.