சென்னை:

மாணவி அனிதா தற்கொலைக்கு சமுக அளவிலேயே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எஸ்சிஎஸ்டி ஆணையத்தில் துணைத்தலைவர் முருகன் கூறினார்.

அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை இன்னும் வரவில்லை என சென்னை சேப்பாக்கத்தில் எஸ்.சி., எஸ்.டி. ஆணைய துணைத்தலைவர் முருகன்  தெரிவித்தார்.

நீட் தேர்வு காரணமாக 1176 மதிப்பெண் பெற்ற அரியலூரை சேர்ந்த மாணவி, தனது மருத்துவர் கனவு பொய்த்து போனதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தற்கொலை விவகாரம் குறித்து, தமிழக எஸ்.சி. எஸ்.டி ஆணையம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த ஆதி திராவிட ஆணைய துணை தலைவர் முருகன் கூறியதாவது,

மாணவி அனிதா மரணத்தின் பின்னணியில் அவரது குடும்பத்தார் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும், சமூக அளவிலேயே வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கூறினார். அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும், அனிதா  மெடிக்கல் மட்டுமல்லாமல் வேறு சில  படிப்புகளுக்கும் விண்ணப்பித்திருந்தார். அதுகுறித்து  அனிதாவின் பெற்றோர் மற்றும் சகோதரரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அனிதா தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்பதை விசாரிக்க அறிவுறுத்தியுள்ளோம்  மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அனிதாவின் மரணம் குறித்த முழு அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும், இன்னும் 15 நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தர மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்ததும் அது அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

1996-97-ம் ஆண்டுகளில் மருத்துவ நுழைவுத்தேர்வு இருந்த நிலையில் தற்போது நீட் தேர்வு அவசியம் என்று கூறிய முருகன், . தமிழகத்தில் தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ள தாலுகா அளவில் பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.