திருப்பதி

ரும் ஏப்ரல் 14 முதல் திருப்பதியில் ஆர்ஜித சேவைகள் தொடங்க உள்ளதாக அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோவில் கடந்த அண்டு மார்ச் முதல் மூடப்பட்டது.  அப்ப்போது ஆர்ஜித சேவைகள் நிறுத்தப்பட்டன.  அதன்பிறகு மத்திய அரசு அனுமதித்த தளர்வுகளின் அடிப்படையில் கோவில் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.  ஆனால் இதுவரை ஆர்ஜித சேவைகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று காலை அறங்காவலர் குழுக் கூட்டம் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடந்தது.  இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து சுப்பா ரெட்டி செய்தியாளர்களிடம், “கடந்த ஓராண்டாக:திருமலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆர்ஜித சேவைகளை, தேவஸ்தானம் ஏப்ரல், 14ம் தேதி முதல் துவங்க முடிவு செய்துள்ளது.  இந்த ஆர்ஜித சேவைகளுக்கு முன்பதிவு செய்யும் பக்தர்கள், கண்டிப்பாக, மூன்று நாட்களுக்கு முன், ‘கோவிட்’ சோதனை செய்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் திருமலை ஏழுமலையான் கோவிலில் செயல்படுத்தி வருவது போல், திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவிலிலும் துலாபாரம் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பல கோவில்களின் நிர்வாக பொறுப்பை, திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் கொண்டு வர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கோவிலின் பணிகளுக்கு ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் பெறப்படும் நிதி செலவிடப்படும். தவிர திருமலையில் பிரசாதங்கள் தயாரிக்கவும், அன்னதானத்திற்காகவும் பயன்படுத்தப்படும் நெய்யைப் பத்திரப்படுத்தி வைக்கும், 82.4 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கலன்களை, 180.4 மெட்ரிக் டன்னாக மாற்றப்பட உள்ளது. இதனால் நெய்யின் தரம், ஆறு நாட்கள் முதல், 14 நாட்களை வரை கெடாமல் பத்திரமாக வைக்கப்படும்

மும்பை மற்றும் ஜம்மு வில் ஏழுமலையான் கோவில் கட்ட விரைவில் தேவஸ்தானம் பூமி பூஜை நடத்த உள்ளது. இனி ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை மார்க்கத்தில் நடந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.” எனத்  தெரிவித்துள்ளார்