இங்கிலாந்து அணிக்கு உதவிய சச்சின் டெண்டுல்கரின் மகன்!

லண்டன்: உலகக்கோப்பை போட்டியில் தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆடவுள்ள இங்கிலாந்து அணிக்கு உதவியுள்ளார் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்.

என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதா? வேறு ஒன்றுமில்லை. வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இங்கிலாந்து வீரர்களுக்கு ஜுன் 24ம் தேதி பந்து வீசினார் அர்ஜுன் டெண்டுல்கர். அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார் அர்ஜுன். தற்போதைய நிலையில், எம்சிசி இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக ஆடி வருகிறார். இவர் ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர்.

இங்கிலாந்து தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள பேராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக, உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளை இங்கிலாந்து வென்றதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இனிவரும் போட்டிகளில் மேற்கண்ட இந்த 3 அணிகளுடன்தான் இங்கிலாந்து மோத வேண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.