ஆயுதப்படை போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை

சென்னை:

சென்னை பெரியமேட்டில் உள்ள தங்கும் விடுதியில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர், ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் பழைய வண்டி பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 26). இவர் கடந்த 2013-ம் ஆண்டு காவலராக தேர்வாகி சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சுரேஷ் கடந்த 16-ந்தேதி முதல் பணிக்கு செல்லமால் இருந்துள்ளார்.

இதையடுத்து அவருடன் பணியாற்றும் சக காவலர்கள், சுரேஷை கடந்த 19-ந்தேதி போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர், தனக்கு சொந்த வேலை இருப்பதால், பெரியமேட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அங்கு தங்கியிருந்த சுரேசின் அறை நேற்று முன்தினம் வெகுநேரமாகியும் திறக்காததால், ஊழியர்கள் கதவை தட்டினர்.

எனினும் கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த அறை ஊழியர்கள், மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது, விஷம் குடித்த நிலையில், படுக்கை அறையில் சுரேஷ் இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த பெரியமேடு போலீசார் சுரேஷ் உடலை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அந்த இடத்தில், சுரேஷ் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியதாக தெரிவித்தனர். அதில், “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இது என் சுய முடிவு. என் தற்கொலை தொடர்பாக யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம்”, என்று சுரேஷ் தற்கொலைக்கு முன் கடிதத்தில் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சுரேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம், காதல் பிரச்சினையா? அல்லது பணிச்சுமையா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சக காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.