தீவிரவாதிகளுக்கு எதிராக எல்லையில் இணைந்து களம் இறங்கிய இந்திய-மியான்மர் ராணுவத்தினர்

--

புதுடெல்லி:

தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை இந்திய மற்றும் மியான்மர் ராணுவத்தினர் இணைந்து  தொடங்கியுள்ளனர்.


இந்திய மற்றும் மியான்மர் ராணுவத்தினர் இணைந்து 3 வாரங்களுக்கு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

இரு நாடுகளும் தங்களது எல்லைப் பகுதியில் தொடங்கியுள்ள இந்த தீவிரவாதிகள் தேடுதல் வேட்டைக்கு ஆபரேசன் சன்ரைஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

முதல் கட்ட ஆபரேசன் சன்ரைஸ் 3 மாதங்களுக்கு முன்பு இந்திய-மியான்மர் எல்லையில் நடத்தப்பட்டது. இதில் வட கிழக்கு மாநிலங்களிலிருந்து இயங்கு தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஒட்டி அமைந்துள்ள மியான்மர் எல்லை 1,640 கி.மீ வரை நீள்கிறது.

மீண்டும் மே 16-ம் தேதி தொடங்கப்பட்டிருக்கும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை, குறிப்பாக மணிப்பூர், நாகாலந்து, அசாம் மாநிலங்களை ஒட்டிய எல்லை பகுதியில் நடைபெற்று வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்கட்ட ஆபரேஷனில் ஏராளமான தீவிரவாதிகள் பிடிபட்டதாகவும், முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுத் துறையின் தகவல்கள் மற்றும் கள நிலவரத்தின் அடிப்படையில் மூன்றாவது கட்ட ஆபரேஷன் நடத்தப்படும் என இரு நாடுகளின் ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு இந்திய-மியான்மர் எல்லையில் இரு நாடுகளும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டை நடைபெற்றபோது, மணிப்பூரில் 18 ராணுவத்தினரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.