டில்லி

ன்று இரவு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுவோர் அதற்கு முன்பு ஆல்கஹால் கலந்த சானிடசர் பயன்படுத்த வேண்டாம் என ராணுவம் கூறியுள்ளது.

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த 24 நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை தேசிய ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது.   இதையொட்டி பலர் வெளியே வராமல் உள்ளனர்.  மீறிச் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.  இந்நிலையில் நேற்று முன் தினம் பிரதமர் மோடி மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மோடி, “கொரோனாவால் உண்டாகி உள்ள இருளை நமது நம்பிக்கை என்னும் ஒளியால் நீக்க வேண்டும்.  வரும் ஞாயிறு (இன்று) இரவு 9 மணிக்கு அனைத்து மக்களும்  வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அணைத்து விட்டு வாசலில் அல்லது பால்கனியில் தீபங்கள் ஏற்றியோ அல்லது மெழுகுவர்த்தி ஏற்றியோ அல்லது டார்ச்லைட் ,  மொபைல் லைட்டை எரிய விட்டோ தங்கள் ஒற்றுமையைக் காட்ட வேண்டும்” என அப்போது தெரிவித்தார்.

இதற்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய ராணுவம் விளக்கு ஏற்றுவோருக்கு எச்சரிக்கை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.  அதில், ”பிரதமர் மோடி கேட்டுக் கொண்டபடி விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  விளக்கு ஏற்றும் முன்பு ஆல்கஹால்கலந்த சானிடைர்களை பயன்படுத்த வேண்டாம்.   அது தீப்பிடிக்கும் தன்மை கொண்டது.  சோப்பு கொண்டு கை கழுவினால் போதுமானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.