சென்னை:

சிஆர் சாலையில்  மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் நடைபெற்று வரும் ராணுவக்கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதையொட்டி இன்று (சனிக்கிழமை) ராணுவ கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கண்காட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பொதுமக்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட அனுமதிக்கப் படுவர். ஆதார், வாக்காளர் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பொதுமக்கள் கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம். பள்ளி, கல்லூரியிலிருந்து வரும் மாணவர்கள் பள்ளி, கல்லூரி சார்பில் வருகை புரிந்தால், அவர்களுக்கு உரிய கல்வி நிறுவனங்களின் மாணவர் அடையாள அட்டை இருந்தால் போதுமானது.

ஆனால், தனியாக வரும் பட்சத்தில் கண்டிப்பாக உரிய ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகள் வைத்திருக்க வேண்டியது  அவசியம்.

கண்காட்சிக்கு வரும்போது உணவுப் பொட்டலங்கள் ஏதும் எடுத்து வர அனுமதியில்லை.

சென்னையிலிருந்து திருவான்மியூர், சோழிங்கநல்லூர், கோவளம் வழியாக மாமல்லபுரம் வரை செல்லும் பேருந்தில் வருவோர் கோவளம் அடுத்த திருவிடந்தை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, திருவிடந்தை கண்காட்சிக்கு வரலாம்.

வாகனங்களில் வருவோர் கோவளத்தை அடுத்தவுள்ள பிரேத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு ராணுவக்கண்காட்சி நுழைவுவாயில் 4 பகுதிக்கு வந்து கண்காட்சியை பார்வையிடலாம்.

திருப்போரூர், உப்பளம் வழியாக திருவிடந்தை கோயில் நிறுத்தத்தை அடைந்து, பின்பு கண்காட்சிக்கு பார்வையிட வருகை தரலாம்.

கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் முறையாக பதிவு செய்துவிட்டு, நுழைவாயில் 4 இல் அடையாள அட்டையைக் காண்பித்து விட்டு, உரிய பாதுபாப்பு ஆய்வுக்கு உட்பட்டே பின்னரே, அரங்குகளுக்கு செல்ல முடியும் என்பது நடைமுறையாக உள்ளது.

எனவே, அதற்கேற்ப பொதுமக்களும், மாணவர்களும் கண்காட்சிக்கு வருகை புரியலாம்.

கண்காட்சியில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) உள்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளின் தளவாடத் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. சுமார் 700 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

முப்படைகளின் சாகச நிகழ்ச்சிகள் காலை 11 மற்றும் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகின்றன. அரங்குகளில், நவீன ரக பீரங்கிகள், துப்பாக்கிகள், நீர்மூழ்கிக் கப்பல், போர்க்கப்பல், ஆயுதம் ஏந்தி போர் புரியம் விமானங்கள், நாட்டின் பிரம்மோஸ், நிர்பயா ஏவுகணைகள், அர்ஜுன் ரக டாங்கிகள் உள்ளிட்டவை கம்பீரமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பாதுகாப்புத்துறையில் பணிபுரிவதற்கான உந்துதலை நிச்சயம் ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைந்துள்ளது.

திருவிடந்தை ராணுவக் கண்காட்சியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், உள்நாட்டிலேயே தளவாடங்களை வடிவமைத்து உற்பத்தி செய்யும் ஏடிஏ, ஹெச்ஏஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் ராணுவத் தளவாடங்கள், செய்முறை விளக்கத்துடன் கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், தேஜஸ்-இலகு ரக விமானம், அர்ஜுன் எம்கேஐஐ பீரங்கி, அர்ஜுன் கவச வாகனம் , பழுதுபார்ப்பு வாகனம், டி-72 இழுவை வாகனம், டி-72 பாலம் அடுக்கு பீரங்கி, சக்கரத்துடன் கூடிய கவச அமைப்பு, நடமாடும் கண்காணிப்புக் கருவி, அதிநவீனப் போர்த் துப்பாக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, வெளிப்புறக் காட்சியரங்குகளில் நிர்பய் ஏவுகணை, தானியங்கி ஆளில்லா தரையிறங்கு வாகனம், எம்பிடி அர்ஜுன் எம்கே-1, அஸ்த்ரா ஏவுகணை, குறைந்த உயரத்திலான நடமாடும் ராடார் கருவி, நடுத்தர ராடார் கருவி, வாகன அணிவகுப்பு ஜாமர், பன்னோக்குத் தூய்மையாக்கல் கருவி, வருணாஸ்த்ரா-கனரக நீர்மூழ்கி எதிர்ப்பு மின்சார டார்பிடோ உள்ளிட்ட தளவாடக் கருவிகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், விமானவியல் தொடர்பான தொழில்நுட்பங்கள், ஏவுகணைகள், போர்க்கவசங்கள், போர் எதிர்ப்பு வாகனங்கள், கடற்படைச் சாதனங்கள், மின்னணு, தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், மாதிரி டிஜிட்டல் வான்வெளி விமான தாக்குதல் அரங்கு என நூற்றுக்கணக்கான ராணுவத் தயாரிப்புகள் இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன.

இறுதி நாளான இன்று  சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.