புதுடெல்லி: கொரோனாவைரஸ் பரவல் காரணமாக, ராணுவத்தின் செயல்திறனோ, அதன் தயார் நிலையோ பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் தரைப்படைத் தளபதி மனோஜ் முகுந்த்.

அவர் கூறியுள்ளதாவது, “வழக்கமான நடவடிக்கைகள் சிலவற்றை ஒத்திவைத்திருக்கிறோம். நிலைமை சீரானதும் அவற்றை மாற்றியமைப்போம். நாடு ஒரு மோசமான தொற்றுநோய்க்கு எதிராக போராடி வரும் வேளையில், எல்லையை பாதுகாப்பாக வைத்திருப்பது எங்களின் முழு பொறுப்பு.

தற்போதைக்கு கொரோனா வைரஸை எதிர்ப்பதே எங்கள் நோக்கம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, ஊரடங்கு உத்தரவு நடவடிக்கைகளை திறம்பட பின்பற்றுவது, எதிர்கால சூழ்நிலைக்கு சொந்த ஆதாரங்களைத் தயார்ப்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல், அதனை ஆரம்பக் கட்டத்திலேயே தடுக்க இந்தியா போராடி வருகிறது. அதேநேரம், வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்தால் தக்க நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராகி வருகிறோம். இந்தக் கொடிய வைரஸை கட்டுப்படுத்துவதில் அடுத்த சில வாரங்கள் முக்கியமானதாக இருக்கும்.

இதுபோன்ற பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறன் மற்றும் பயிற்சியை ராணுவம் பெற்றுள்ளது. சிவில் அதிகாரிகள் அழைத்தால் உதவுவதற்கு தயார்நிலையில் உள்ளோம்” என்றார்.