டெல்லி:

எல்லை பாதுகாப்பு படை வீரர், மத்திய ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஆகியோரை தொடர்ந்து தற்போது ஒரு ராணுவ வீரர் தனது மூத்த அதிகாரிகளின் துன்புறுத்தல் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீர் மாநில எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் கூறிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இவரை தொடர்ந்து மத்திய ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஒருவர், ராணுவத்திற்கும் துணை ராணுவ வீரர்களுக்கும் வழங்ப்படும் சம்பளம் உள்ளிட்ட சலுகைகளில் பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்திருந்தார்.

இவர்களை தொடர்ந்து தற்போது டேராடூன் காலாட் படை அணியில் பணியாற்றும் ராணுவ வீரர் லான்ஸ் நாய்க் யாகிய பிரதாப் சிங் என்பவர் தனது மூத்த அதிகாரிகளின் துன்புறுத்தல் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்தாண்டு ஜூன் மாதம் தான் குடியரசு தலைவர், பிரதமர், பாதுகாப்பு துறை அமைச்சர், உச்சநீதிமன்றம் ஆகியவற்றுக்கு ஒரு புகார் கடிதம் எழுதியிருந்தேன்.
இது தொடர்பாக விசாரணை நடத்த பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதம் வந்த என்னை மூத்த அதிகாரிகள் துன்புறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். ராணுவ நீதிமன்றத்தில் என்னை நிறுத்தும் அளவுக்கு விசாரணை நடத்துகின்றனர். நான் ஒன்னும் வெளியிட கூடாத ரகசியத்தை கடிதமாக எழுதவில்லை.
ராணுவ வீரர்களை அதிகாரிகள் ஷூவை பாலிஷ் செய்ய அனுமதிக்க கூடாது என்று தான் அதில் குறிப்பிட்டிருந்தேன். விபரீதமான முடிவை நான் எடுக்கும் அளவுக்கு அதிகாரிகள் டார்ச்சர் செய்கின்றனர். ஆனால் நான் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். வேறு எந்த வழியிலும் நான் முயற்சிக்கமாட்டேன். அது எனது சர்வீஸை பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், நாட்டை பாதுகாக்கும் வீரர்கள் அடுத்தடுத்து குற்றச்சாட்டுக்களை கூறி வருவது நாட்டு மக்களுக்கும், வீரர்களின் குடும்பத்தாருக்கும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.