ராணுவ பயிற்சி கமாண்ட் தலைமையகத்தை சிம்லாவிலிருந்து மீரட்டுக்கு மாற்ற கடும் எதிர்ப்பு

சிம்லா:

ராணுவ பயிற்சி கமாண்ட் தலைமை அலுவலகத்தை சிம்லாவிலிருந்து மீரட்டுக்கு மாற்றுவதற்கு இமாச்சலப் பிரதேசத்தில் அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.


ராணுவ பயிற்சி கமாண்ட் தலைமையகம் இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் 27 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த தலைமை அலுவலகத்தை சிம்லாவிலிருந்து உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை கடந்த மாதம் தொடங்கியது.

ராணுவ தளபதி ஜெனரல் பிப்பின் ராவத் சிம்லாவில் உள்ள தலைமையகத்துக்கு 2 நாள் பயணமாக வந்தார்.

தலைமையகத்தை மீரட்டுக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்திவிட்டு, இது குறித்து கவர்னர் ஆச்சார்யா தேவ்ரட்டிடம் விளக்கியுள்ளார்.

கடந்த 1993-ம் ஆண்டு இந்த ராணுவ பயிற்சி கமாண்ட் தலைமையகம் மத்தியப் பிரதேச மாநிலம் மோவ் என்ற இடத்துக்கு மாற்றப்பட்டது.

2 லெப்டினன்ட் ஜெனரல்கள், 7 மேஜர் ஜெனரல்கள், உட்பட 200 ராணுவ அதிகாரிகள் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, பெரும்பாலோர் உள்ளூர்வாசிகளாக இருந்தனர். இதனால், மீண்டும் சிம்லாவுக்கே தலைமையகம் வந்தது.

இந்நிலையில், தலைமையகத்தை மீரட்டுக்கு மாற்ற தற்போது தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைக்கு இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயராம் தாக்கூர், முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங் மற்றும் எதிர்கட்சித் தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோரை சந்தித்துள்ளனர்.

ராணுவ பயிற்சி கமாண்ட் தலைமையகம் சிம்லாவிலிருந்து மீரட்டுக்கு மாற்றப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை வைத்தனர்.

ராணுவத்தின் அனைத்து பயிற்சிகளுக்கும் சிம்லா உகந்த இடம். அமைதியான இடம் என்று ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ராணுவ பயிற்சி கமாண்ட் தலைமையகத்தை சிம்லாவிலிருந்து மீரட்டுக்கு மாற்றுவதற்கு இமாச்சலப் பிரதேச அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதோடு, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று ராஜ்யசபை  காங்கிரஸ் துணை தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.