டெல்லி:

நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தாக்குதல் துப்பாக்கிகளில் தரம் இல்லை என்பது சோதனையில் தெரியவந்ததால் அதை இந்திய ராணுவம் நிராகரித்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே இஷாப்பூரில் துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு7.62*51 எம்எம் ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்பட்ட இந்த ரக துப்பாக்கிகளை இந்திய ராணுவம் கடந்த வாரம் சோதனை செய்து பார்த்தது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ சோதனையின் போது பல்வேறு குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை ராணுவத்தில் பயன்படுத்த வேண்டும் என்றால் அதன் வடிவமைப்பை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும்.

இதில் அதிகளவில் தீப்பொறி வெளிச்சமும், சப்தமும் ஏற்படுகிறது. இது சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இதை ராணுவ பயன்பாட்டிற்கு நிராகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

கடந்த ஆண்டும் இது போல் போதுமான தரம் இல்லை என்று கூறி 5.56 எம்.எம் ரக உள்நாட்டு உற்பத்தி துப்பாக்கி நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவத்திற்கு துப்பாக்கிகள் வாங்குவது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் தாக்குதல் துப்பாக்கிக்கு தேவையான அம்பசங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் ராணுவம், விமானப் படை, கடற்படை பிரதிநிதிகளாக உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கடந்த ஆண்டு இந்த தாக்குதல் துப்பாக்கி திட்டத்தில் 20 நிறுவனங்கள் கலந்துகொண்டன. ஆனால், இன்னும் அவற்றை கொள்முதல் செய்யாமல் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.