மும்பை: இன்டீரியர் டிசைனர் அன்வே நாயக் தற்கொலை வழக்கில் அர்னாப் கோஷ்வாமி கைது செய்யப்பட்டுள்ளநிலையில், இந்த வழக்கில்,  மகாராஷ்டிரா மாநில  முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசையும் சேர்க்க வேண்டும் என  தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

2018ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த  கட்டிட உள் அலங்கார நிபுணர் (இன்டீரியர் டிசைனர்)  அன்வே நாயக் மற்றும் அவரின் தாயார் ஆகியோர் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாக  ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனலின் தலைமை செய்திஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசையும் இணை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக செய்தியளார்களை சந்தித்த, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் உமேஷ் பாட்டீல், அன்வே நாயக் தற்கொலை சம்பவம் நடந்தபோது, மாநில  பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்தான் மாநில உள்துறை அமைச்சக பொறுப்பை வைத்திருந்தார்.  அப்போதுதான்,  “நாயக்கின் குடும்பத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து, தற்கொலை வழக்கை மூடுவது தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பது தெளிவாகியுள்ளது”. இதன் காரணமாக, தேவேந்திர பட்னாவிஸ் இந்த வழக்கில் இணை குற்றவாளியாக சேர்க்கப்பட  வேண்டும். நாயக் குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுக்க முயன்ற காவல்துறை அதிகாரிகளையும் வழக்கில் இணைக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
மேலும்,  கோஸ்வாமிக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்களும் அரசியல் தலைவர்களும் முன்வந்த விதம் பத்திரிகையாளர்  அர்னாப் ஒரு பாஜக ஆதரவாளர்  என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது என்று பாட்டீல் கூறினார்.
உத்தரபிரதேசத்தில், ஒரு பத்திரிகையாளர் அட்டூழியங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டபோது குரல் எழுப்பவில்லையே என்று கேள்வி எழுப்பிய பாட்டீல், நாட்டில் பல பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆனால் காவி கட்சி அவர்களுக்கு ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை என்றும் கடுமையாக சாடினார்.
அர்னாப் கைது வழக்கு விவரம்:
2018ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த  கட்டிட உள் அலங்கார நிபுணர் (இன்டீரியர் டிசைனர்)  அன்வே நாயக் மற்றும் அவரின் தாயார் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். இந்த விவகாரம் அப்போது பிரச்சினையான நிலையில், மாநிலத்தை ஆட்சி செய்த பாஜக அரசு, இந்த தற்கொலை சம்பவத்தை மூடி மறைத்ததாக கூறப்படுகிறது.
தற்கொலைக்கு முன்பு அன்வே நாயக் எழுதிய கடிதத்தில், “ரிபப்ளிக் டிவி, ஃபெரோஸ் ஐகாஸ்ட்எக்ஸ், ஸ்மார்ட்வொர் ஆகிய மூன்று நிறுவனங்களின் உரிமையாளர்கள் கட்டணத்தைச் செலுத்தாத காரணத்தால், இந்த மோசமான முடிவை நான் எடுக்கிறேன் ” என்று குறிப்பிட்டிருந்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறி 2019 ஏப்ரலில் வழக்கை முடித்து வைத்தது ராய்காட் காவல்துறை. இந்நிலையில், அன்வேயின் மகள் அதன்யா நாயக் எழுப்பிய புதிய புகாரின் அடிப்படையில், கடந்த மே மாதம் மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மறு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, தற்போது மாநில அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வரும் பாஜக ஆதரவு ஊடகமான  ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிமீது,  அன்வேநாயக் தற்கொலை செய்ய தூண்டியதாக மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.