மும்பை: கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள ரிபப்ளிக் டிவி தலைமைநிர்வாகி அர்னாப் கோஸ்வாமியின் ஜாமின் மனு இன்று 2வது நாளாக மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மும்பை மாநில அரசுக்கும், ரிப்பளிக் டிவிக்கும் இடையே ஏற்பட்டு வந்த மோதலைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலம்   அலிபாக்கை சேர்ந்த இன்டீரியர் டிசைனர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பான வழக்கில்,  அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்,  இன்டீரியர் டிசைனருக்கு வழங்க வேண்டிய லட்சக்கணக்கான தொகையை கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக,  கடந்த புதன்கிழமை அதிகாலை அலிபாக் போலீசார் மும்பை லோயர் பரேலில் உள்ள அர்னாப் கோஸ்வாமியின் வீட்டுக்கு சென்று  அவரை கைது செய்தனர். இதையடுத்து, அவரை 14நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் கேட்டு மும்பை உயர்நீதிமனற்த்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, எம்.எஸ். கார்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது,  அர்னாப் கோஸ்வாமி தரப்பு வக்கீல்களின் வாதங்கள் நேற்று நடைபெற்றது. அரசு மற்றும் அர்னாப் தரப்பு வாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற நலையில்,  “நாளை (இன்று) மதியம் இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு அமர்வாக நாம் கூட உள்ளோம்” எனக்கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையடுத்து,  அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் மனு மீதான விசாரணை 2வது நாளாக இன்று மதியம் 12 மணியளவில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.