ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தில் 99% பேருக்கு பட்டுவாடா: ஜனவரிக்குள் முடிப்போம் என மனோகர் பரிக்கர் தகவல்

டெல்லி:

இந்த மாத இறுதிக்குள் 99 சதவீதம் பேருக்கு ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தின் கீழ் பட்டுவாடா செய்து முடிக்கப்புடும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கூறினார்.

மனோகர் பரிக்கர்
ஒரு பதவி ஒரு பென்சன் திட்டம் கடந்த 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சேர 2013ம் ஆண்டு அடிப்படை ஆண்டாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

எனினும் 2014ம் ஆண்டு முதல் இது அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எனினும் இந்த திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கூறியதாவது:

இந்த திட்டத்தின் கீழ் இது வரை 20 லட்சம் ஓய்வூதியர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ஜனவரி இறுதிக்குள் 99 சதவீதம் நிறைவு செய்யப்படும். 19.70 லட்சம் பென்சனர்கள் இந்த பயனை அடை ந்துள்ளனர். 68 ஆயிரம் பென்சனர்களின் மனு கடந்த டிசம்பரில் பரிசீலனை முடிந்தது. இதில் 19 ஆயிரம் மனுக்கள் பென்சன் பட்டுவாடாவுக்கு அனுப்பப்படடுள்ளது.

தகுதியான 99 சதவீத பயனாளிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் பட்டுவாடா செய்யப்படும். இதில் ஒரு சதவீதம் பேரை மட்டும் அடையாளம் காண முடியவில்லை. அனேகமாக அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இவர்களை கண்டறிய அனைத்து முகமைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மொத்த நிலுவை தொகையான 10 ஆயிரத்து 800 கோடி ரூபாயில் இது வரை நிலுவை தொகையாக 6 ஆயிரத்து 300 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. நடப்பு பட்டுவாடா நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.