ஆளுநர் பன்வாரிலாலின் அநாகரிக செயல்: மன்னிப்பு கேட்க கோரி 200க்கும் மேற்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள் கடிதம்


சென்னை:

செய்தியாளரின் கன்னத்தை தட்டிய ஆளுநர் பன்வாரிலால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்து ஆளுநர் பன்வாரிலாலுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இந்த கடிதத்தின் நகல்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் அனுப்பி உள்ளனர்.

இந்த கடிதத்தில் ஆளுநர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், ஆளுநரின் செயல் அநாகரிகமானது என்று கண்டனம் தெரிவித்தும்  தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கையெழுதிட்டு அனுப்பி உள்ளனர்.

நேற்று தமிழக ஆளுநர் மாளிகையில் திடீரென செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநருக்கு நெருக்கமானவர்களுடன் தனக்குப் பழக்கமிருப்பதாக நிர்மலா தேவி கூறியிருந்த ஆடியோ செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்துவிசாரிக்க ஒரு நபர் கமிஷன் ஒன்றை அமைத்து ஆளுநர் பன்வாரிலால் தன்னிச்சையாக அமைத்து உத்தரவிட்டார்.

ஆளுநர் தன்னிச்சையாக விசாரணை கமிஷன் அமைத்தது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று மாலை ஆளுநர் சந்திப்பின் முடிவில், தி வீக் இதழின் செய்தியாளரான லட்சுமி  சுப்பிரமணியன் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, அவரது கன்னத்தை தட்டி சிரித்துக்கொண்டே சென்றார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, லட்சுமி சுப்பிரமணியன், தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளுநரின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் இந்த அநாகரிக  செயலுக்கு பல்வேறு ஊடகத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றமும், ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், ஆளுநரின் அநாகரிக செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளனர்.

இந்த கடிதத்தை தமிழக கவர்னர் மற்றும் இந்திய குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோருக்கும் இமெயில் மூலம் அனுப்பி உள்ளனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.