டில்லி

டந்த 10 மாதங்களில் வங்கிகள் தங்கள் செலவைக் குறைக்க 2500 ஏடிஎம்களை மூடி உள்ளன.

தற்போது வங்கிகளில் வாராக்கடன்கள் மிகவும் அதிகரித்துள்ளன.   இதற்காக தற்போதைய ஆளும் கட்சியும் முந்தைய ஆளும் கட்சியும் ஒன்றை ஒன்று குறை கூறுகின்றன.   ஆனால் அதே நேரத்தில் இந்த வாராக்கடன்களால் வங்கிகளுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.     நிர்வாக செலவுகளை சமாளிக்க வங்கிகள் கடுமையாக போராடி வருகிறது.   செலவைக் குறைக்க வங்கிகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அவற்றில் ஒன்றாக ஏடிஎம் களின் எண்ணிக்கையை வங்கிகள் குறைத்துள்ளன.  கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் ஆன 10 ஆண்டுகளில் பல ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன.  முன்பு 1,10,116 ஆக இருந்த ஏடிஎம்கள் தற்போது 1,07,630 ஆக குறைக்கப்பட்டுள்ளன.   அதாவது 2486 ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன.   இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி பல ஏடிஎம்களை மூடி உள்ளது.

வங்கிக் கிளைகளுக்கு மக்கள் பணம் எடுக்க வருவதை குறைக்க ஏடிஎம் களை உபயோகப்படுத்த நிர்வாகம் வலியுறுத்தியது.   அதன் பிறகு செலவு அதிகரிப்பதாகக் கூறி  ஏடிஎம் களின் இலவச பரிவர்த்தனைகள் குறைக்கபட்டன.    இப்போது அந்தந்த வங்கிகளின் ஏடிஎம் களில் மாதத்துக்கு 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் மாதத்துக்கு 3 முறையும் மட்டுமே கட்டணமின்றி பரிவர்த்தனை செய்ய முடியும்.

தற்போது நிர்வாகச் செலவுகளுக்காக ஏடிஎம்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பல வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.   இதனால் வாடிக்கையாளர்களுக்கு பணமும் நேரமும் அதிகம் செலவாகிறது.   இது வாடிக்கையாளர்களுக்கு மேலும் இடர் தருவது மட்டுமின்றி வங்கி ஊழியர்களுக்கும் பணியை அதிகரிக்கும் என வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.