சுமார் 7 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை : அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

டில்லி

டந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி வரை மத்திய அரசில் சுமார் 7 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் வேலை இன்மை கடுமையாகி வருவதாகப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.  படித்து முடித்து சரியான பணி கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.   இந்நிலையில் பிரதமர் மோடி ஒருமுறை அரசுப்  பணி கிடைக்கவில்லை என்றால் பக்கோடா விற்பனை செய்யலாம்.   அதுவும் ஒரு நல்ல லாபகரமான பணியாகும் என தெரிவித்தது நாடெங்கும் கடும் சர்ச்சையை உண்டாக்கியது.    பலர் இதை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற குளிர் காலத் தொடரில்  மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு நேற்று மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாகப் பதில்  அளித்தார். அந்த பதிலில், “கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசின் பல்வேறு துறைகளில்  மொத்தம் 6 லட்சத்து 83 ஆயிரத்து 823 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன.

இதில் கிளர்க்குகள் டைபிஸ்டுகள் ஸ்டெனோக்கள் என குரூப் சி பிரிவில் மட்டும் 5 லட்சத்துக்கு 74 ஆயிரத்து 289 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதைப் போல் குரூப் பி பிரிவில் 89 ஆயிரத்து 638 பணியிடங்களும், குரூப் ஏ பிரிவில் 19 ஆயிரத்து 896 பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

இந்த ஆண்டு அதாவது 2019-20ல் இதுவரை  பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் குறித்த அறிக்கையின் அடிப்படையில் பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்எஸ்சி) மூலம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 338 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.   அத்துடன் ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே வாரியத்தின் மூலம், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 573 பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்துள்ளன.

அரசின் மையப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிக்கையின்படி, குரூப் சி பிரிவில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 138 பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தபால் துறையில் உள்ள 19 ஆயிரத்து 522 காலியிடங்களுக்கு பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன.

ரெயில்வே பணியாளர் தேர்வு மையம் மற்றும் அரசுப் பணியாளர் தேர்வு மையம் ஆகியவை மூலம் 4 லட்சத்து 8 ஆயிரத்து 591 காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன. தேர்வுகள் மூலம் காலிப் பணியிடங்கள் அனைத்தும் உரிய நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன.

இதே முறையில்  நிர்வாக அதிகாரம் இல்லாத பதவிகளுக்குக் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து நேர்முகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடக்கின்றன”.என ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.