எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினை விளாசிய ஏ.ஆர். ரஹ்மான் மகள் கதிஜா…!

கடந்தாண்டு ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா ஹிஜாப் அணிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதை பலரும் விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் பிப்ரவரி 11-ம் தேதி பிரபல எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின் தனது ட்விட்டர் பதிவில் ஏ.ஆ.ரஹ்மானின் மகள் கதிஜா ஹிஜாப் அணிந்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து, “எனக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது அன்பு மகளை பார்க்கும்போதெல்லாம் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது போல் உணர்கிறேன். பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள் கூட எளிதாக மூளைச்சலவை செய்யப்படுவது உண்மையில் வேதனையளிக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவு பலராலும் பகிரப்பட்டது.

இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கதிஜா, “ஒரே வருடத்தில் இந்த விவகாரம் மீண்டும் சுற்றி வருகிறது. நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் அனைவரும் ஒரு பெண் என்ன ஆடையை அணிய விரும்புகிறாள் என்பதில் கவனம் செலுத்துகின்றனர்.

அன்புள்ள தஸ்லிமா, என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதில்லை. மாறாக எனக்குப் பெருமையாகவும், நான் ஏற்றுக் கொண்ட விஷயத்தில் உறுதியாகவும் உணர்கிறேன்.

உண்மையான பெண்ணியம் என்றால் என்ன என்று கூகிள் செய்து பார்க்கவும். ஏனென்றால் அது மற்ற பெண்களைத் தரக்குறைவாகச் சாடுவதும் இந்த விவகாரத்தில் அவர்களது தந்தையை இழுத்துப் பேசுவதும் அல்ல. மேலும் உங்களுடைய ஆய்வுக்காக உங்களுக்கு என்னுடைய எந்த புகைப்படத்தையும் நான் அனுப்பியதாக எனக்கு நினைவில்லை”என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா.