கேரள வெள்ள நிவாரணத்துக்கு இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் :ரூ.1 கோடி நிதி

சென்னை:

கேரள வெள்ள நிதியாக பிரபல இசை அமைப்பாளர் ஏர்.ஆர்.ரகுமான் ரூ.1 கோடி நிதி உதவி செய்துள்ளார்.

வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக கேரளா கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. தென்மேற்கு பருவமழை காரணமாக  கடந்த மாதம் பெய்த பேய்மழை காரணமாக பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பொதுமக்கள் அடிப்படை வசதிகளை இழந்துள்ள நிலையில், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய அரசு சார்பில் 600 கோடி ரூபாய் நிதிஉதவி வழங்கப் பட்டுள்ள நிலையில், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், மாநில அரசுகள் என பல்வேறு தரப்பில் இருந்து சுமார்  ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி வசூலாகி உள்ளது. உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாடு களிலிருந்தும் நிதியுதவி குவிந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் ஏ.ஆர்.ரகுமான், வாஷிங்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து இசை நிகழ்ச்சியில் இறுதியில் ரூ.1 கோடிக்கான காசோலையை கேரள வெள்ள நிவாரண நிதிக்காக வழங்குவதாக அறிவித்தார்.

இதுகுறித்து, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள  ஏ.ஆர்.ரஹ்மான், கேரள சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய சிறு உதவி தெரிவித்துள்ளார். . இந்த நிதியை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்ப உள்ளார். இந்த தகவலை அவர் ஞாயிற்றுக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.