அரியர் தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணை குறித்து இன்று முடிவு! சட்டப் பல்கலைக்கழகம்
சென்னை: சட்டப் படிப்புக்கான அரியர் தேர்வை நடத்துவதற்கான கால அட்டவணை குறித்து இன்று (4ந்தேதி) கூடும் சிண்டிகேட் கூட்டத்தில் இன்று (டிச. 04) முடிவுசெய்யப்படும் என்று சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, இறுதித்தேர்வு தவிர மற்ற அனைத்து பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, அரியர் மாணவர்களின் இறுதித்தேர்வு தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டப் படிப்பிற்கான அரியர் தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சஞ்சய் காந்தி என்ற சட்டக் கல்லூரி மாணவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (டிச. 04) விசாரணைக்கு வந்தது.
அப்போது, அகில இந்திய பார் கவுன்சில் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், அரியர் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார். அப்போது நீதிபதி ரத்துசெய்யப்பட்ட அரியர் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்று கேள்வி எழுப்பினர்.
சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் முன்னிலையான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், சட்டப்படிப்புகளுக்கான அரியர் தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணை வெளியிடுவது குறித்து சிண்டிகேட் குழுவில் இன்று (டிச. 04) முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.