மாணவர் கோகுல்

மதுரை:

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கல்லூரி மாணவர் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்சியரின் குறைதீர்ப்பு நிகழ்ச்சியில் மாணவர் இந்த மனுவை கொடுத்தார். கல்லூரி மாணவரின் இந்த மனுவை வாசித்த ஆட்சியிர் பரபரப்பு அடைந்தார்.

ஒரு மாநிலத்தின் முதல்வரையே குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி, கல்லூரி மாணவர் கோகுல் மனு கொடுத்தது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், மனு அளித்த மாணவர் கோகுல் கூறியதாவது,

தமிழ்நாட்டு மக்கள் வாழ்வாதாரத்துக்கு போராடி வருகிறார்கள். இந்நிலையில், நாட்டுக்குத் தேவையான எவ்வளவோ திட்டங்கள் இருக்கும்போது சுற்றுச்சூழலைக் கெடுக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஓஎன்ஜிசி திட்டங்களை தமிழக முதல்வர் ஏன் அனுமதிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், தமிழக அரசின் மக்கள் விரோத போக்கு காரணமாக,  எங்களைப்போன்ற மாணவர்களை, இளைஞர்களை ஏன் போராடத் தூண்டுகிறார்? அந்த அடிப்படையில் தான் முதல்வரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி மனு கொடுத்தேன் என்றார்.

மேலும், தான் யாருடைய பின்னணியில் இருந்தும் போராடவில்லை என்ற கோகுல்,  தமிழக அரசால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வளர்மதி, மதுரையில் எப்போதோ நடந்த ஒரு போராட்டத்துக்காக கைது செய்யப்பட்ட கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி ஆகியோரெல்லாம் எனக்கும் நண்பர்களே என்றும் புதிர் போட்டார்.

இருந்தாலும், நான் கொடுத்த மனுவுக்கு அது காரணமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

மனுவை யாரிடம் கொடுத்தீர்கள் என கேட்டதற்கு, திங்கட்கிழமை நடைபெற்ற குறை தீர்ப்பு நாள் கூட்டத்தின்போது, மதுரை மாவட்ட ஆட்சியரிடம்  முதல்வரை கைது செய்ய கோரி மனு கொடுத்தேன் என்றும், மனுவை படித்து பார்த்த ஆட்சியர்,  என்னை  அதிர்ச்சியோடு என்னை ஏற இறங்கப் பார்த்தார். பின்னர் மனுவை வாங்கி வைத்துக்கொண்டு என்னை அனுப்பிவிட்டார் என்றார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு மாணவர்கள் எவ்வாறு தன்னெழுச்சியுடன் திரண்டார்களோ அதைப்போன்று தற்போதைய தமிழக சூழலுக்கும் ஒன்று திரள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்றார் கோகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் எடப்பாடியை கைது செய்ய வேண்டும் என்று மனு அளித்த மாணவர் கோகுல், மதுரையில் ஒரு தனியார் கல்லூரியில் விஸ்காம் படித்து வருகிறார்.

ஒரு மாநிலத்தின் முதல்வர் மீதே மாணவர் ஒருவர் தைரியமாக, அவரை கைது செய்யக்கோரி மனு அளித்திருப்பது தமிழக அரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

மாணவர் கோகுலும் விரைவில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில்  அடைக்கப்படலாம் என  தகவல்கள் பரவுகிறது….. இதன் காரணமாக மதுரையில் அவர் படிக்கும் கல்லூரியில் பரபரப்பு நிலவுகிறது.