சொகுசு கார் வழக்கு : நடராஜனுக்கு சிபிஐ மீண்டும் பிடி வாரண்ட்

சென்னை

சிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டு தலைநகர் லண்டனில் இருந்து கடந்த 1994ஆம் ஆண்டு லெக்சஸ் ரக சொகுசு கார் இறக்குமதி செய்து ரூ.1.06 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வரி இழப்பு செய்ததாக நடராஜன் உட்பட சிலர் மீது வழக்கு தொடர்ந்தது.   சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது

இந்த தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.   சசிகலாவின் கணவர் நடராஜன் தனக்கு உடல் நலக் குறைவு உள்ளதாகவும் அதனால் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.   அந்த மனு ஏற்கப்பட்டு அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.   ஆனால் இந்த தீர்ப்பின் விவரத்தை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு நடராஜன் தரப்பு தெரிவிக்கவில்லை.

அதனால் அவர் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்குமாறு சிபிஐ நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டது.  அந்தக் கோரிக்கையை ஏற்ற சிபிஐ  நீதிமன்றம் நடராஜன், பாஸ்கரன் உட்பட 4 பேருக்கும் ஜாமீனில் வர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.  மேலும் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.