நீதிமன்ற வளாகத்திற்குள் கைது செய்வதை சகிக்க முடியாது: உயர்நீதிமன்றம்  

நீதிமன்ற வளாகத்தில் கைது நடவடிக்கைகளை சகித்துக்கொள்ள முடியாது’ என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கோவை ஒண்டிப்புதூரில் கடந்த ஏப்ரல் 4 அன்று,  ஆட்டோ ஓட்டுநர் சந்தோஷ் என்பவர்,  தன்னுடன் இன்னும் சிலரை சேர்த்துக்கொண்டு எம். சிட்டிபாபு என்பவரை தாக்கிக் கொலை செய்தார்.

பிறகு ஏப்ரல் 10ஆம் தேதி திருப்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவர் சரணடைய வந்தார்.

ஆனால் அவர் சரணடைவதைத் தடுத்து மாஜிஸ்டிரேட் முன்னிலையிலேயே அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதை தடுக்க அவரது வழக்கறிஞர்கள் முயன்றனர். ஆனால் காவல்துறையினர் பலவந்தமாக சந்தோஷை கைது செய்தனர்.

இதனால், திருப்பூர் வழக்கறிஞர்கள் சங்கம், நீதிபதி முன்னிலையில் சரணடைய வந்த ஒருவரை கைது செய்வது சட்டப்படிக் குற்றம் என்று சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து குறிப்பிட்ட சம்பவம் குறித்தான ஆவணங்களை பார்வையிட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிமன்ற வளாகத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளது உச்சநீதிமன்ற நடவடிக்கைக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “இதில், தவறாக செயல்பட்ட காவல் பணியாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். இதற்காக அரசு வழக்கறிஞருக்கு இவ்வழக்கின் அனைத்து விவரங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் தன்மைகளை ஓரளவுக்கு கூர்ந்து கவனித்தவகையில், காவல்துறையினரின் இத்தகைய இடையூறு காரணமாக மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இயல்புப் பணிக்கு திரும்ப 15 நிமிடங்கள்வரை நீடித்ததை தெரிந்துகொள்ளமுடிகிறது.

நீதிமன்றத்திற்குள் கைது செய்வதற்காக இவ்வகையில் நுழைய காவல்துறை அனுமதிக்கப்படக் கூடாது. கைது நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத்தில் இடமில்லை.

இதில், காவல்துறையினர் சரியான முறையில் புரிதல் ஏற்படும்விதமாக பயிற்சியளிக்கப்பட வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.