சென்னை:
மிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா வாசிக்கும் 110விதி பற்றி பேச அனுமதி மறுத்ததால் திமுக வெளிநடப்பு செய்தது.
தமிழக சட்டசபையில் இன்று முதல்வர்  ஜெயலலிதா 110 விதியின் கீழ் 2 அறிக்கைகளை படித்தார்.
இதை ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் பாராட்டி பேசினார்கள். அடுத்து தி.மு.க. சட்டசபை துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து பேச வாய்ப்பு கேட்டார்.
அதற்கு சபாநாயகர்,  110 விதியின் கீழ் நன்றியும் பாராட்டும்தான் சொல்ல முடியும். நீங்கள் நன்றி சொல்லப் போகிறீர்களா  என்று கேட்டு, துரைமுருகனுக்கு  பேச வாய்ப்பு கொடுத்தார்.
அப்போது பேசிய துரை முருகன், ‘‘முதல்-அமைச்சர் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிடுவதில் எங்களுக்கு மாறுபாடு இல்லை. ஆனால் ஒன்றை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நெடுஞ்சாலை துறை பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கை முடிந்து விட்டது. இப்போது மேலும் புதிய திட்டங்கள் பற்றி….
stalin
(உடனே சபாநாயகர் குறுக்கிட்டு 110 விதியின் கீழ் முதல்வர் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்புகளை வெளியிட உரிமை உள்ளது என்றார். அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு சில விளக்கங்களை அளித்தார். 110 விதியின் கீழ் அறிக்கை வாசிப்பது ஏன் என்பதற்கு ஆதாரங்களுடன் தகவல்களை தெரிவித்தார்.)
ஜெயலலிதாவின் இந்த விளக்கத்துக்கு, மீண்டும் துரைமுருகன் பதில் அளித்து பேச எழுந்தார். சபாநாயகரும் அனுமதி கொடுத்தார்.
ஆனால், துரைமுருகன் 110 விதியின் கீழ் பேசுவது பற்றி விளக்கம் கேட்க முயன்றார். அதை சபாநாயகர் அனுமதிக்கவில்லை.
இதன் காரணமமாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுகவை சேர்ந்த  ஜெ.அன்பழகன், ரங்கநாதன் உள்பட பல எம்.எல்.ஏ.க்கள் இருக்கையை விட்டு எழுந்து சபாநாயகர் அருகில் வந்து அவருடன் வாக்குவாதம் செய்தனர்.
சபாநாயகர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.வை, உங்கள் இடத்துக்கு செல்லுங்கள். சபைக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும் என எச்சரித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமியும் இதே கருத்தை சொல்லி  வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் வெளிநடப்பு செய்தார்.
பின்னர்  மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்றத்தில் அவசர முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை வெளியிடுவதற்காக 110-வது விதி பயன்படுத்துவது மரபு. 110-வது விதியின் கீழ் முதலமைச்சரோ, அமைச்சரோ பேசினால் அதுபற்றி விமர்சனம் செய்ய முடியாது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் 110-வது விதி மரபுக்கு மாறாக பயன்படுத்தப்படுகிறது. ஏதாவது ஒரு திட்டத்தை அறிவிப்பதற்காக முதலமைச்சர் இதை பயன்படுத்துகிறார். இதனால் 110-வது விதியின் மரபே சிதைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பொதுப்பணித்துறை மீதான விவாதம் நடந்து அதற்கான திட்டங்களை அமைச்சர் அறிவித்து நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது.
ஆனால் அதன்பிறகு அந்த துறையை சார்ந்த புதிய திட்டங்களை முதல்- அமைச்சர் அறிவிக்கிறார். அவரது தோழமை கட்சியைச் சார்ந்தவர்கள் பாராட்டி பேசுகிறார்கள்.
ஏற்கனவே நிதி ஒதுக்கிய பிறகு எந்த விவாதமும் இல்லாமல் புதிய திட்டங்களை அறிவிப்பது முறை தானா? என்பது குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் விளக்கம் கேட்க எழுந்தார்.  ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்க வில்லை. எனவே அதை கண்டித்து நாங்கள் வெளி நடப்பு செய்தோம்.
தொடர்ந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்போம் என்றார்