விபத்துகளினாலும், பல்வேறு நோய்களாலும் மனித உடலின் சில பகுதிகள்  பாதிக்கப்படுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது தோல், எலும்பு, ரத்தம் போன்றவைகளாகும்.

இதற்கு உள்ள தட்டுப்பாடு காரணமாக பலர் உயிரிழக்க நேரிடுகின்றது. தேவையை பூர்த்தி செய்ய செயற்கையாக உற்பத்தி செய்ய ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செயற்கை எலும்புகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

இதுகுறித்து லண்டனின் ராயல் சொசைட்டி தகவலை வெளியிட்டு உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐந்து கண்டுபிடிப்புகள் குறித்த படைப்பில் இந்த செயற்கை எலும்பு தொழில்நுட்பம் குறித்து கூறப்பட்டுள்ளது.

 

இந்த தொழில்நுட்பத்திற்கு “நானோ கிக்கிங்” என்று கூறப்பட்டுள்ளது.  அதில் எலும்பு மஞ் சை களிலிருந்து குருத்தணுக்களை எடுத்து அதனை உயர் அதிர்வலைகளுக்குள்ளாக்கி அதை வெவ்வேறு எலும்பு உருவாக்கும் அணுக்களாக மாற்றப்பட்டு எலும்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த எலும்புகள்  நோயாளிகளின் சொந்த அணுக்களில் இருந்து உருவாக்கப்படுவதாகவும், இதன் காரணமாக பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

“இயற்கையாக ஒரு நொடிக்கு ஆயிரம் முறை அதிரும் எலும்புகளை, தற்போது நாங்கள் உயிரியல் ரீதியாக உருவாக்குகிறோம்” என ஸ்காட்லாந்து ஆராய்ச்சிபேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் ஏற்கனவே பாதிப்புள்ளாகி இருக்கும் எலும்புடன்  இதை பொருத்தி இணைய வைக்கப்படும் என்றும், எலும்பு சேதங்களையும்  சரிசெய்ய இயலும் என்றும் கூறி உள்ளார்.

எதிர்காலத்தில் இது புரட்சியை ஏற்படுத்தும் என்றும், இதன் காரணமாக எலும்பு புற்று நோய்களை தடுக்க முடியும் என்று கூறினார்.

ரத்தத்திற்கு அடுத்து எலும்புகள்தான் அதிகமாக மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படு கிறது எனவே “நானோ கிக்கிங் புரட்சியின்” தாக்கம்  வருங்காலத்தில் மிக அதிகமானதாக இருக்கும் அவர் கூறினார்.

தற்போது தயாரிக்கப்படும் செயற்கை எலும்புகளை மனித உடலில் பொருத்தி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், தொடர்ந்து 3 ஆண்டுகள் விரிவாக ஆய்வுக்கு பிறகு, அதனால் உருவாகும் பிரச்சினை குறித்தும், நிவாரணங்கள் குறித்தும் கண்டறியப்படும் என்றும், இது புழக்கத்திற்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும் என்றும் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.