புதுடெல்லி: வானிலை முன்னறிவிப்பு செயல்பாட்டில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்(ஐஎம்டி) திட்டமிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம், உடனடி ஒளிபரப்பு செயல்முறையை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்விளைவாக, தீவிர பருவநிலை நிகழ்வுகளின்போது 3-6 மணிநேரங்கள் கணிப்பை மேம்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, வானிலை முன்னறிவிப்பில் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து ஆய்வுசெய்வதற்கு, ஆராய்ச்சி குழுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது ஐஎம்டி.

மேலும், புவி அறிவியல் அமைச்சகமும் இந்த முன்மொழிவு குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வானிலை முன்னறிவிப்பில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பாக, பிற நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு‍ ஆய்வை மேற்கொள்வதற்கு ஐஎம்டி உத்தேசித்து வருவதாக கூறப்படுகிறது.