‘ஆருத்ரா’ தரிசனம் பக்தர்களை அனுமதிக்கும் வழக்கில் கலெக்டர் பதிலளிக்க உத்தரவு

சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்துக்கு வெளிமாவட்ட பக்தர்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில்ல், காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் விஷ்ணுதாஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரை பண்டிகையன்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்து விடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்று காரணமாக, சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்துக்கு, வெளி மாவட்ட, மாநில பக்தர்களை அனுமதிப்பது இல்லை என மாவட்ட நிர்வாகம் முடிவு அறிவித்துள்ளது.

வரும் டிசம்பர் 28-ஆம் தேதி, டிசம்பர் 29-ஆம் தேதி அன்று நடைபெறும் தேரோட்டம், டிசம்பர் 30-ஆம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது, குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. வெளி மாவட்ட, மாநில பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை மாவட்ட எல்லையில் போலீஸார் தடுத்து நிறுத்தி விடுவார்கள் எனவும், பயணிகள் விடுதிகள், திருமண மண்டபங்களில் வெளியூர் நபர்களுக்கு இடம் வழங்கக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த 3 நாள்களிலும் சிதம்பரம் நடராஜரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு அனுமதி வழங்காதது எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்துள்ளது. எனவே, வெளி மாவட்ட, மாநில பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தீவிரமாக கடை பிடிக்கவும், அரசு விதிக்கும் வேறு எந்த நிபந்தனைகளையும் தீவிரமாக கடைபிடிக்கவும் தயாராக உள்ளதாக மனுவில் கோரியிருந்தார்.