மும்பை: ஐபிஎல் தொடரை நடத்துவதற்காக, டி-20 உலகக்கோப்பைத் தொடரை ரத்துசெய்ய பிசிசிஐ முயற்சிக்கிறது என்று வெளியான செய்தியை மறுத்துள்ளார் அந்த அமைப்பின் பொருளாளர் அருண் துமால்.
டி-20 உலகக்கோப்பைத் தொடரை, ஆஸ்திரேலியாவில் அக்டோபர் & நவம்பர் மாதங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அப்போட்டி நடக்குமா? என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அதே காலக்கட்டத்தில் ஐபிஎல் தொடர் நடத்தப்படலாம் என்ற தகவலை ஆஸ்திரேலிய மீடியா ஒன்று வெளியிட்டது.
ஆனால், இதை பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் மறுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “திட்டமிடப்பட்ட காலத்தில் டி-20 உலகக்கோப்பைத் தொடரை நடத்துவது என்று ஆஸ்திரேலியா முடிவுசெய்தால், அதற்கான முழு பொறுப்பையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அந்நாட்டில் பல்வேறு நாட்டு அணியினரை அனுமதிப்பார்களா? ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவார்களா? என்பது குறித்தெல்லாம் அவர்கள் முடிவுசெய்ய வேண்டும். அதுதொடர்பாக பிசிசிஐ எதுவும் கூறுவதற்கில்லை.
இந்திய அணியின் இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்க தொடர்களே நடக்குமா? என்பதே இன்னும் உறுதியாகாத நிலை உள்ளது. இதனிடையே வேறு எதையும் சொல்வதற்கில்லை” என்றுள்ளார்.