Random image

விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பிச் செல்ல அருண்ஜெட்லி உதவி…..ராகுல்காந்தி

 

டில்லி:
விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியே அருண்ஜெட்லி உதவி செய்துள்ளார் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக விஜய்மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதே கருத்தை பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் தெரிவித்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டில்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,‘‘லண்டன் செல்வதற்கு முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்ததாக விஜய் மல்லையா கூறியுள்ளார். தனது சந்திப்புகள் குறித்து அனைத்தையும் சமூகவலைதளத்தில் எழுதி வரும் அருண் ஜெட்லி இந்த சந்திப்பு குறித்து எதுவும் கூறவில்லை. மல்லையாவுடன் ஒரு சில சொற்களே பேசியதாக ஜெட்லி கூறுவது பொய்.

தலைமறைவானவருடன் நிதியமைச்சர் பேசியுள்ளார். அவர் லண்டன் செல்ல போவதாக கூறியுள்ளார். இதனை ஏன் அருண் ஜெட்லி, சிபிஐ, அமலாக்கத்துறை, போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. கைது அறிக்கை தகவல் அறிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. இதனை சிபிஐ.யை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் தான் செய்ய முடியும். மல்லையா நாட்டை விட்டு தப்பி செல்ல அருண் ஜெட்லி மறைமுகமாக உதவியுள்ளார்.

அருண் ஜெட்லியை விஜய்மல்லையா சந்தித்ததை காங்கிரஸ் எம்.பி பி.எல் புனியா பார்த்துள்ளார். 15 முதல் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண்ஜெட்லி இலவச பாஸ் வழங்கியுள்ளார்” என்றார்.