பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி விதிப்பை குறைக்க இயலாது…..அருண்ஜெட்லி

டில்லி:

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி.யில் கொண்டு வர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதர நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கும் போது இந்தியாவில் மட்டும் அதிக விலை கொடுத்து பெட்ரோல், டீசலை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால்பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், கருத்தாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து மத்திய  அமைச்சர் அருண்ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசின் வரி&மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 சதவீதத்தில் இருந்து 11.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதமான 0.72 சதவீதம் பெட்ரோல், டீசல் சாராததாகும். பெட்ரோல், டீசல் சாராத வரி என்பது 2017-18ம் ஆண்டில் 9.8 சதவீதமாகும். இது 2007-08ம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட அதிகபட்ச வருவாய் ஆகும்.

மக்கள் வரியை நேர்மையான முறையில் செலுத்தினால் அதிக வரிவிதிப்புக்கு ஆளாகும் பெட்ரோல், டீசலு க்கான வரி குறையும். அதனால் மக்கள் தங்களது வரி பங்களிப்பை நேர்மையான முறையில் செலுத்த வேண்டும். இதனால் பெட்ரோல், டீசலை நம்பியிருக்க வேண்டிய நிலை நீங்கும். சம்பளம் வாங்கு பிரிவினர் அனைவரும் முறையாக வரி செலுத்தி விடுகின்றனர். இதர பிரிவினரும் வரி செலுத்தும் முறையை மேம்ப டுத்த வேண்டும். இதன் மூலம் வரி புகார் இல்லாத சமுதாயம் கொண்ட நாடாக இந்தியா திகழும்.

பெட்ரோல், டீசலுக்கான வரியை ஒரு லிட்டருக்கு ரூ.25 குறைத்தால் நிர்வாகம் செய்ய முடியாத அளவுக்கு நாட்டின் கடன் சுமை உயரும். பெட்ரோல், டீசல் மீதான ஒவ்வொரு ரூபாய் வரி குறைப்பும் 13,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தும். அதனால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று’’ என்று தெரிவித்துள்ளார்.