ஏ டி எம் பணத் தட்டுப்பாடு :  அருண் ஜேட்லியின் மழுப்பல் பதில்

டில்லி

நாடெங்கும் பல ஏடிஎம்களில் பணம் இல்லாமல் மக்கள் தவித்து வரும் போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இது தற்காலிகம் என மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

கடந்த வாரம் பீகார் உள்ளிட்ட பல கிழக்கு பகுதி மாநிலங்களில் பணம் இல்லாமல்பல ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை.  இது குறித்து உடனடியாக ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் அரசும் அந்தப் பகுதிகளில் மக்களுக்கு பணத்தேவை அதிகம் இருந்ததால் இவ்வாறு நிகழ்ந்ததாகக் கூறி தேவையான பணத்தை ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பி வைக்குமாறு வங்கிகளுக்கு ஆணை இட்டன.

ஆனால் அந்த நிலை ஒவ்வொரு மாநிலங்களாக பரவி வருகிறது.   காசி, டில்லி, போன்ற நகரங்களில் மிகவும் பணத் தட்டுப்பாடு உள்ளது.  மேலும் மத்தியப் பிரதேசம், கர்நாடகா, உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இதே நிலை நீடிக்கிறது.   மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம் களில் பல இடங்களில் ரூ.2000 கிடைப்பதில்லை.   ரூ.500 மற்றும் ரூ.100 மட்டுமே கிடைக்கின்றன.   விரைவில் இதற்கும் தட்டுப்பாடு வரலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்.

இது குறித்து நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  அதற்கு அவர். “நாங்கள் நாட்டில் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தை கண்கானித்து வருகிறோம்.   மக்களுக்கு தேவையான அளவு ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன.  வங்கிகளில் தேவையான அளவு பணம் உள்ளது.   ஒரு சில இடங்களில் திடிரென பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.   இது வழக்கமானது அல்ல.  விரைவில் இவை சரி செய்யப்படும்.   வெறும் தற்காலிக தட்டுப்பாட்டுக்கு மக்கள் அஞ்ச வேண்டாம்” என மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.   பணமதிப்பிழப்பு அறிவித்த போது இருந்த ரூபாய் நோட்டுப் பற்றாக்குறை போல ஒன்றரை ஆண்டுகள் கழிந்து மீண்டும் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.