‘பாக்ஸர்’ படம் குறித்து அருண் விஜய்யின் சர்ச்சை கடிதம்….!

அருண் விஜய்யின் ‘அக்னிச் சிறகுகள்’, ‘சினம்’ படங்களுக்கு முன்பாக படப்பூஜையுடன் தொடங்கப்பட்ட படம் ‘பாக்ஸர்’. இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை.

படம் குறித்து எந்தவொரு தகவலுமே தெரியாத சூழலில், நேற்று (ஜூன் 23) ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹேமா ருக்மணி ‘பாக்ஸர்’ குறித்த முக்கியமான அப்டேட் வெளியிடவுள்ளார் என்று படக்குழுவினர் விளம்பரப்படுத்தினார்கள். இது சமூக வலைதளத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஆனால், இன்று (ஜூன் 24) காலை அருண் விஜய் தனது ட்விட்டர் பதிவில் சிறிய கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.

“உங்களைப் போலவே நானும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘பாக்ஸர்’ படம் குறித்து என்னிடம் உங்களில் பலர் கேட்டு வருகிறீர்கள். இந்தப் படத்துக்காக என்னைத் தயார்படுத்த நான் மிகவும் கடினமாக உழைத்து வந்தேன். ஆனால், இன்னும் முழுமையான படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. உடலளவிலும் மனதளவிலும் அதிக முயற்சியும் உழைப்பும் இப்படத்துக்குத் தேவை என்பதால் அது குறிப்பிட்ட காலகட்டத்தில நடக்க வேண்டும். அது தயாரிப்பு நிர்வாகத்தின் தெளிவான அறிவிப்பால் மட்டுமே சாத்தியமாகும். எனவே இப்படம் குறித்த எனது அதிகாரபூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்கவும். நன்றி”

இவ்வாறு அருண் விஜய் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.