அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது: மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து தமிழக அரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்து உள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள்  போராட்டத்தின்போது   காவல்துறையினர் நடத்திய காட்டு மிராண்டித்தனமான  துப்பாக்கி சூட்டில் 13பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தமிழக அரசு  ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது.

இந்த ஆணையத்தின் விசாரணைக்கு  தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளையில்  மனு  தாக்கல் செய்யப்பட்டிருந்தது அந்த மனுவில், கலவரம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் என்பதால் துப்பாக்கிச் சூடு என்று அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்த வரம்பை நோக்கியே விசாரணை அமையும். இதில் விதிகள் பின்பற்றப்படவில்லை எனவே, விசாரணை ஆணையத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி. செல்வம், பஷீர் அகமது ஆகியோர் அரசுக்கு விசாரணை ஆணையம் அமைக்க அதிகாரம் உண்டு என்று கூறி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

எனினும் கலவரம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் என்பதால் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது குறித்து விசாரணைக்கு உத்தரவு என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதை மாற்ற முடியுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் புதன் கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.