தொடரும் நிர்மலா தேவியின் ஜெயில் பயணம்: ஜாமின் மனு 6வது முறையாக தள்ளுபடி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் 6வது முறையாக மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. அவரது காவல் ஜூலை 19ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் தேவாங்கர் தனியார் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளுக்கு பண ஆசைக்காட்டி, தவறான பாதைக்கு அழைப்பு விடுத்தது தொடர்பான மொபைல் போன் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தன்னை ஜாமினில் விடுவிக்குமாறு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவி சார்பில் தொடர்ந்து மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே 5 முறை அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 6வது முறை ஜாமின் வேண்டி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. நிர்மலாதேவிக்கு ஜாமின் கொடுக்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி,ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதன் காரணமாக நிர்மலாதேவியின் காவல் மேலும் 15 நீட்டிக்கப்பட்டு ஜூலை 19-ம் தேதி வரை சிறையில் இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.