ஆருஷியின் பெற்றோர் சிறையில் இருந்து விடுதலை!!

லக்னோ:

நொய்டாவை சேர்ந்தவர் ராஜேஷ் தல்வார். இவரது மனைவி நூபுர் தல்வார். இருவரும பல் மருத்துவர்கள். இவர்களது மகள் ஆருஷி. இவர் டில்லியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். அவரது வீட்டில் ஹேமராஜ் (வயது 45) என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த 2008-ம் ஆண்டு மே 15-ம் தேதி நள்ளிரவில் ஆருஷியும், ஹேமராஜும் கொலை செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை வழக்கில் ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு காஜியாபாத் சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆருஷியின் பெற்றோர் மேல்முறையீடு செய்தனர். இருவரையும் விடுதலை செய்து கடந்த 12ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ராஜேஷ் தல்வார், நுபுர் தம்பதி மாலை தஸ்னா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். போலீசார் பாதுகாப்புடன் அவர்கள் நொய்டாவில் உள்ள நுபுரின் பெற்றோர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். தஸ்னா சிறையில் ராஜேஷ் தல்வார், நுபுர் ஆகியோர் சிறையில் கைதிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அதற்கான ஊதியமாக, அவர்களுக்கு ரூ.49, 500ஐ சிறை நிர்வாகம் வழங்கியது. ஆனால், இருவரும் அதை ஏற்க மறுத்து விட்டனர்.

கார்ட்டூன் கேலரி