ஏ சி அறையில் போராட்டம் செய்யும் கெஜ்ரிவால் : காங்கிரஸ் கண்டனம்

டில்லி

முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஏசி அறையில் வசதியாக தர்ணா செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் கூறி உள்ளார்.

டில்லியில் தலைமை செயலரை தாக்கிய சர்ச்சையை தொடர்ந்து அரசு அதிகாரிகள் முதல்வர் மற்றும் மற்ற அமைச்சர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை.   இதற்காக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுடன் ஆளுநரை சந்தித்தனர்.   ஆளுநர் அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

அதனால் ஆளுநர் மாளிகை வரவேற்பு அறையில் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா மற்றும் அமைசர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இன்று 5 ஆம் நாளாக போராட்டம் தொடர்கிறது.   இந்தப் போராட்டத்துக்கு  ஆதரவும் எதிர்ப்பும் சரிசமமாக உள்ளன.

அஜய் மாக்கன்

டில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன், “தலைமைச் செயலாளரை நடு இரவில் அழைத்து தாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ஏசி அறையில் அமர்ந்து வசதியாக தர்ணா போராட்டம் நடத்துகிறார்.   மக்கள் தண்ணீர் இல்லாமல் காற்று மாசுபட்டு அவதிப் படுகின்றனர்.

தில்லியில் சுற்றுச் சூழல் மாசு குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது.   ஆனால் முதல்வர் வசதியாக ஏசி அறையில் போராட்டம் நடத்துகிறார்.   அப்படிப்பட்ட ஆம் ஆத்மி கட்சியோடு காங்கிரஸ் ஒருபோதும் கூட்டணி அமைக்காது” என்று கூறி உள்ளார்.