உடல்நலக் குறைவு : அதிகாரிகள் சந்திப்பை ரத்து செய்த அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்ததால் அதிகாரிகளுடனான சந்திப்பை  அவர் ரத்து செய்துள்ளார்.

டில்லியில் தலைமை செயலர் தாக்கப்பட்டதால் அரசு அதிகாரிகள் அமைச்சர்களுக்கு ஒத்துழைப்பு தருவதை நிறுத்தி விட்டனர்.   அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரும் அமைச்சர்களும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.   அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து முதல்வர் கெஜ்ரிவால் தனது அமைச்சர்களுடன் கவர்னர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அரசு அதிகாரிகள் தாங்கள் வேலை நிறுத்தம் செய்யவில்லை எனவும்,  அமைச்சர்களின் சந்திப்புகளில் கலந்துக் கொள்வதை தவிர்ப்பதாகவும் தெரிவித்தனர்.   மேலும் தலைமைச் செயலர் தாக்கப்பட்டதால் தங்களின் பாதுகாப்புக்கு முதல்வர் உத்திரவாதம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.   அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புக் கொண்டு தனது போராட்டத்தை கை விட்டார்.

இன்று டில்லி அரசின் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அரசு அதிகாரிகளுடன் சந்திப்பு நிகழ்த்தினார்.  அத்துடன் துணை முதல்வரும் அரசு அதிகாரிகளுடன்  பேச்சு வார்த்தைகள் நிகழ்த்தினார்.    ஆளுநரின் கட்டுப்பாட்டில் அரசு அதிகாரிகள் உள்ளதால் ஆளுநரும் இந்த  பேச்சு வார்த்தைகளின் போது உடன் இருந்தார்.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி உள்ளதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளுடனான சந்திப்பை அவர் ரத்து செய்துள்ளார்.   பெயர் தெரிவிக்க விரும்பாத ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் ஒருவர், “தினமும் முதல்வர் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வார். அத்துடன் சமவிகித உணவை எடுத்துக் கொள்வார்.  இந்த உள்ளிருப்புப் போராட்டத்தால் அவர் உடல்நிலை கெட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஓய்வில் இருப்பதாகவும் நாளை முதல் தனது பணிகளை தொடர்வார் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.