டெல்லி முதல்வராக 3வது முறை பதவியேற்றார் அர்விந்த் கெஜ்ரிவால்..!

புதுடெல்லி: டெல்லி மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார் அர்விந்த் கெஜ்ரிவால்.

அவருடன் மொத்தம் 6 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். டெல்லியின் புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில், டெல்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின்இ கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் உசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

சமீபத்தில் நடந்துமுடிந்த டெல்லி மாநில சட்டசபைத் தேர்தலில், கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி மொத்தம் 62 இடங்களில் வெற்றிபெற்று சாதனைப் படைத்தது. ஆட்சியைப் பிடிக்க பெரும் பிரயத்தனம் செய்த மத்திய ஆளும் கட்சியான பாரதீய ஜனதாவுக்கு 8 இடங்களே கிடைத்தன.

இதனையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லி முதல்வராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் இரவு நியமித்தார். கெஜ்ரிவாலின் பரிந்துரையை ஏற்று, 6 பேர் அமைச்சர்களாக பதவி யேற்கவும் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

கெஜ்ரிவால் சரியாக பிற்பகல் 12.15 மணிக்கு முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.